I have an idea to create the world the way you want, so be part of this forum...

Wednesday, 27 August 2014

கொடுப்பதற்கும் , இழப்பதற்கும் எதுவும் இல்லை - மறக்க முடியாத சென்னை நினைவுகள்

பெங்களூரில் படித்து கொண்டிருந்த போது அறை நண்பன் ஒருவன் அடிக்கடி மேற்ப்படிப்பு பற்றிய விளக்கங்களை தொலைப்பேசியில் முகம் தெரியாத மாமாவிடம் பேசுவதும், அதற்காக விண்ணப்பங்களை நிரப்புவதிலும் தொடர்ந்து ஆர்வமாக ஈடுபட்டு வந்தான், அவனை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கை குறித்த அச்ச உணர்வு அடிக்கடி வருவதுண்டு. அது ஏன் என்று தெரியவில்லை அவனை விட நானும் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஒரு போட்டி கலந்த வேகமும் என்னிடத்தில் இருந்தது. ஆனால் அவ்வப்போது படித்து என்ன செய்ய போகிறோம், அதற்கு வேலைக்கு சென்றாலும் பணம் நிறைய சம்பாரிக்கலாம் என்ற சிந்தனையும் அவ்வப்போது மனதில் வந்து செல்வதுண்டு.

குடும்பத்தின் தேவை அதிகமாக இருந்ததால் மேற்ப்படிப்பிற்கு செலவு செய்யும் அளவுக்கு குடும்பம் வலிமை பெற்றிருக்கவில்லை. அப்போதெல்லாம் என்னை போன்ற இளைஞர்களுக்கு கால் செண்டரில் பணிபுரிந்தால் அதிகமான சம்பளம் வாங்களாம், மகிழ்ச்சியோடு நம்மாள் வாழ முடியும் என்ற மோகம் மட்டுமே பெங்களூரில் வசித்த என்னை போன்ற இளைஞர்களுக்கு இருந்து வந்தது. அப்படி ஒரு கால கட்டத்தில் தான் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக பயின்று வந்த உறவினர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு ஒரு வித அச்ச உணர்வோடு மேல்ப்படிப்பு சென்னையில் படிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்?

நீ சென்னையில் படிக்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக உதவி செய்வதாக கூறினார். உடனே மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி, பணம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்? அதை எல்லாம் பார்த்து கொள்ளலாம், கவலைப்பட தேவையில்லை என்றார்.அடுத்த மூன்றொரு மாதங்களில் பெங்களூரில் படிப்பும் முடிவடைந்தது. எனக்கு என் உறவினர்(அண்ணன்) இரண்டு கல்லூரிகளின் விண்ணப்ப படிவங்களை வாங்கி அனுப்பி இருந்தார். அந்த கல்லூரிகளில் சேர்வதற்கான விருப்பம் என்னிடம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. மேலும் அந்த கல்லூரிகளில் சேர்வதற்கு சிபாரிசுகள் அவசியம் என்று பல்வேறு சாக்கு போக்குகளை பலகி அனைவரும் சொல்லி வந்தனர்.

என் மனதில் இருப்பதெல்லாம் ஏதாவது படிக்க வேண்டும், திரும்பி பெங்களூர் செல்ல கூடாது என்பது மட்டுமே.

சென்னை வந்த நான், கிண்டியில் இருக்க கூடிய சென்னைப்பல்கலைக்கழக ஆடவர் விடுதியில் தான் தங்கி இருந்தேன். மூன்று நாட்கள் விடுதியில் தங்கியிருந்த எனக்கு, அண்ணன் அவரது ஆராய்ச்சி கூடத்தில் உள்ள ஒரு அறையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். தூங்காத இரவுகள், தாடி கோந்திய முகத்துடன் தொடர் முயற்சிகள், தோல்வி கண்டு பயப்படாத துணிச்சலும் சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை பெற்று தந்தது. பல்கலைக்கழக கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலை, இன்றைக்கு தான் கடைசி தேதி! இன்று நீங்கள் கட்ட இயலவில்லை என்றால் உங்கள் இடத்தை மற்றொருவருக்கு கொடுத்து விடுவோம் என எச்சரித்தார் அலுவலகத்தில் வேலைப்பார்த்த பெண்! அன்றைக்கு என் மூளை வேலை செய்தது போல் இப்போதெல்லாம் வேலை செய்யும் என்றால் ஆச்சரியம் தான். அப்படி ஒரு பதட்டமான நிலை மனதில்! வீட்டிற்கு போன் செய்த தருணம் அது அம்மா எனக்கு கல்லூரியில் சேர சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது, அவ்வளவு பணம் என்னிடம் இல்லை, யார் நமக்கு தருவார்கள்? அவர்களும் புலம்பலுடன் பக்கத்து வீட்டில் கேட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றார்கள், காத்திருந்த நொடிகளை எப்போதும் மறக்க முடியாது! மீண்டும் அலைத்த போது அவர்களிடம் இல்லை என்று வேதனையுடன் சொல்லிவிட்டார்கள். அடுத்த இரண்டொரு மணி நேரத்தில் விஷயம் அறிந்த பெங்களூரை சேர்ந்த நண்பர் ஒருவர் தேவையான பணத்தை தந்து உதவினார்.

ஒரு வழியாக வாழ்க்கையில் இலக்கு, தேடல் அதற்கான முயற்சி, வேகத்தை பெங்களூரை விட சென்னையில் தான் அதிகமாக கற்று கொண்டேன்.

கிண்டி சென்னை பல்கலைக்கழக ஆடவர் விடுதியில் உறவினர் என்ற முறையில் முறைகேடாக யாரும் தங்க கூடாது என உத்தரவினை விடுதி மேலாளர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இரண்டு வாரத்திலே அறிவித்து விட்டார். உடனே அண்ணன் வேறு எதாவது அறைக்கு சென்றால் நன்றாக இருக்கும், என வறுத்தமான மனநிலையோடு கூறியதை என்னால் உணர முடிந்தது. வேலையை செய்து கொண்டே படித்தால் வீட்டை எதிர்பார்த்து இருக்க தேவையில்லை என்ற எண்ணம் எப்போதும் என்னிடத்தில் அதிகம். அந்த வகையில் முதல் பகுதி நேர வேலைக்காக சென்னை சிட்டி செண்டரில் உள்ள கேஎப்.சி உணவகத்திற்கு சென்று வேலை கேட்டேன், உடனே வேலையும் எளிதாக கொடுத்துவிட்டார்கள். மணிக்கு ரூ.31 என தீர்மானிக்கப்பட்டது. உள்ளே சாப்பிட எதுவும் வழங்கப்படாது என்றனர். காலையில் பொதுவாக நான் சாப்பிடுவது கிடையாது, மதியம் பல்கலைக்கழக வகுப்பு தோழி ஒருவர் உணவு எடுத்து வருவார். என் வகுப்பில் என்னை போன்று சாப்பிடாமல் வருபவர்கள் பலர் அதனால் அவள் எடுத்து வரும் அந்த உணவை பகிர்ந்தே உண்டிருக்கிறோம். பகிர்ந்து உண்ணுதலின் அவசியத்தையும் என்னை போன்ற பலரையும் அடையாளம் காட்டியது சென்னை. கற்க வசதியின்றி வறுமையில் வாடிய பலரை ஊக்கப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த குழுக்களை செல்லும் இடமெல்லாம் காண வழிவகை செய்யும் நூலக கழஞ்சியம் சென்னை.
இரண்டாம் வருட முதுகலைப்படிப்பின் போது ஒரு வருட காலம் கால் செண்டர் ஒன்றில் வேலைப்பார்த்து கொண்டே இரவு பகல் தெரியாமல் படிக்க நேரிட்டது. ஒவ்வொரு நாளும் சமூகம் சார்ந்து எதையாவது எழுத வேண்டும், மானுடவியல், ஊடக ஆய்வியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை, துறை தலைவர் அவர்களின் ஆய்வு சார்ந்த சிந்தனை இவை எல்லாம் வேறு உலகிற்கு அவ்வப்போது என்னை அழைத்து செல்வதுண்டு.

படித்து பட்டம் பெற்று பெரிதாக சாதிக்காவிட்டாலும் முயற்சி, வேகம், உழைப்பு அதற்கான தேடலை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கோணத்தில் இன்றும் என்னை உணர செய்யும் உந்து கோளாக சென்னை இருந்து வருவது எதார்த்தம்.













Sunday, 20 July 2014

பிரிக்ஸ் மாநாடு மோடிய அரசின் புதிய அத்தியாயம்



பிரிக்ஸ் மாநாட்டில் பேசப்பட்ட மற்ற அம்சங்களை விட, அதன் மூலமாக அமையப் போகும் பிரிக்ஸ் வங்கிதான் பெருமளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது எனலாம். இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின் மோடி பங்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நிகழ்வு இதுவாகும்.

பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரேசில் புறப்படு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு சண்டை, மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்னைகளால், உலகின் பல்வேறு நாடுகள் அமைதியிழந்து தவிக்கும் நிலையில் நடைபெறுவதால் இந்த மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார். பிரச்சனைகளின் கூடாரமாக உலகம் மாறிவரும் இந்த சூழ்நிலையில் அவற்றுக்குத் தீர்வுகாணும் வலிமையுள்ள அமைப்பாக பிரிக்ஸ் வலுப்பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். குறிப்பாக பிராந்திய எல்லை பிரச்சனைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல், பருவநிலை மாற்றங்களுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்போடு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி தான் விவாதிக்க இருப்பதாகவம் அதில் தெரிவித்திருந்தார். மோடியின் இந்த அறிக்கையும், அவரது அணுகுமுறைகளும் ஏதோ ஒரு வகையில் உலக தலைவர்களின் கவனத்தை ஈர்க்கத்தான் செய்திருக்கிறது.



இந்த பிரிக்ஸ் அமைப்புக்கான திட்டமிடல் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது என்ற உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2001 ஆம் ஆண்டு வரலாற்றின் முக்கிய ஆலோசனையை கோல்ட்மன் என்ற நிறுவனம் தனது ஆய்வில் வளர்ந்த நாடுகளை அடுத்து மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டது, அதில் பிரேசில் (B) ரஷ்யா (R) இந்தியா (I) சீனா (C) நாடுகள் அடங்கும். இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இந்த பிரிக் அமைப்போடு தென் ஆப்பிரிக்காவும் இணைந்து (S) பிரிக்ஸ் என்றானது. இந்த ஜந்து நாடுகளும் மார்ச் 2012 புதுதில்லியில் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் சேர்ந்து சில முக்கிய முயற்சிகளை எடுத்தனர். ஜந்து நாடுகளுக்கு இடையிலான வணிக, பொருளாதார, தொழில் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவது, அதே சமயத்தில் உலகின் பிரதான பிரச்னைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக பிரிக்ஸ் அமைப்பின் நிலைப்பாட்டை உறுதி செய்தல் போன்றவை அந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஜந்து நாடுகளின் முக்கிய மூலதன தேவையாக தீர்மானிக்கப்பட்டு கிடப்பில்போடப்பட்டிருந்த புதிய வளர்ச்சி வங்கி தற்போது மீண்டும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தலைமை பொறுப்பு வகிப்பார் என்பதும் வளர்ச்சி வங்கி ஷாங்காய் மகாணத்தில் நிறுவப்பட உள்ளதும் மேற்குலகத்துக்கு சங்கடத்தைத் தருகின்ற செய்திகள்.

உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் போன்ற பன்னாட்டு முதலீட்டு அமைப்புகள் மேற்கு உலக நாடுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவை வளரும் நாடுகளின் முதலீட்டில் அவ்வப்போது பெரும் இழப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக முக்கிய முடிவுகளில் வாக்குரிமை கூட வளரும் நாடுகளுக்கு தரப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் நிமித்தம் பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் நிறுவப்பட உள்ள புதிய வளர்ச்சி வங்கி ஜந்து நாடுகளின் சம பங்களிப்போடு பெரும் சவாலை உலக நாடுகளுக்கு தற்போது ஏற்படுத்தியுள்ளது.உலகின் உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கும் சீனா, அழுத்தமான பொருளாதார சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியா, கச்சா எண்ணெய் வளம் கொண்ட ரஷ்யா, விரைவான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் அமைப்பு 40% உலக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இப்படிப்பட்ட இந்த பிரிக்ஸ் அமைப்பு வெறும் செங்கற்களாக மட்டும் இல்லாமல் வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக பொருளாதார கொள்கையை விரைவில் அமைக்க உள்ளதை பிரிக்ஸ் ஆறாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து அதிபர்களும், பிரதிநிதிகளும் அவர்களின் உரையில் முன்வைத்து சென்றனர்.

அதே சமயம் எல்லை தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு காண்பதனால் உருவாகும் நன்மைகள் குறித்து ஒருமித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டது பிரிக்ஸ் அமைப்பு பொருளாதாரத்தையும் தாண்டி நட்பு நாடுகளாக புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் வளார்ச்சி உண்டு. பிரிக்ஸ் அமைப்பின் முதல் தேவையான புதிய வளர்ச்சி வங்கி நம்பிக்கையின் அடையாளம் மட்டும் இன்றி இந்தியாவின் அடுத்த முக்கிய நகர்வுகளுக்கு பயன்படப் போகும் உந்துகோலோக, கேடயமாக இருக்கும் எனவும் நம்பப் படுகிறது.

அதே சமயம் பிரிக்ஸ் அமைப்பின் இதர நாடுகளும் அந்த நாட்டிற்கான தேவையையும், வேகத்தையும் காட்டுவது உறுதி என்ற போதிலும் இந்தியா நிச்சயம் தனித்துவம் பெறும். வர்த்தக உடன் பாட்டினை தாண்டி உறவு மேம்பட வேண்டும் என்பதே பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர்களின் விருப்பமாக இருந்தது. காரணம் சீனாவும் தென் ஆப்பிரிக்காவும் இலங்கையின் நட்பு நாடுகளாகவே கருதப்படுகின்றன. சீனா இலங்கையில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில், இந்தியா பிரிக்ஸ் அமைப்பை தனக்கு தேவையான வகையில் பயன்படுத்தி உறவை சாதகமாக்கி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பிரிக்ஸ் அமைப்பும், அதன் மூலம் ஏற்படுத்தப் போகும் வங்கியும், மேற்குலக நாடுகளுக்கும், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளுக்கும் கடும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்ல, எப்போதுமே அவற்றின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள், சுதந்திரமான பொருளாதாரக் காற்றைச் சுவாசிப்பதற்கான வாய்ப்பையும் இந்த வங்கி அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

மக்களின் கனவுகள் இங்கு நம்பிக்கை தருவனவாக இல்லை



மத்திய அரசால் தாக்கப்பட்டுள்ள 2014-2015க்கான பட்ஜெட் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றிருந்தாலும் அதன் ஆக்கப்பூர்வ செயல்பாட்டினை ஆய்வுக்கு உட்படுத்தும் போது நாட்டின் நிதிநிலை பின்தங்கி இருக்க கூடிய இந்த சூழ்நிலையில் ஆடம்பர திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது  வறுத்தமளிப்பதாக பல்வேறு சமூக நல அமைப்புகள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் தனியார்மயமாக்கல் கொள்கையை வலியுறுத்துவையாக உள்ளது. குறிப்பாக மக்களின் எண்ணத்தையும், தேவையையும் பூர்த்தி செய்பவகையாக இல்லாமல் கட்சியின் நிலைப்பாட்டினை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் பல சுவாரஷ்யமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய தேவையை பூர்த்திசெய்ய கூடிய திட்டங்கள் அதில் இல்லாமல் போனதும், முக்கியத்துவம் தரப்படாததும் வேடிக்கை.
அதில் குறிப்பிட வேண்டிய திட்டங்கள் பிண்வருமாறு
நாடு முழுவதும் 100 நவீன நகரங்கள் உருவாக்கப்படும் அதற்கு ரூ.7060 கோடி அரசு ஒதுக்கியிருப்பது, நாட்டின் ஒருமைபாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு 200 கோடி செலவு செய்ய திட்டமிருப்பது, கங்கையை பாதுகாக்கும் திட்டத்திற்கு ரூ.2037 கோடி ஒதுக்கியிருப்பது அதேசமயம் மக்களால் மிகவும் எதிர்பார்த்திருக்கும் திட்டங்களில் ஒன்றான நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு முதற்கட்ட ஆய்வு பணிக்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருப்பது போன்றவை மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக இல்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூக வளமேம்பாடு, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய தேவைகள் கேள்வி குறியாகி உள்ள போது அதனை சரிவிகித முறையில் எப்படி கையாள்வது போன்ற அடிப்படை சிந்தனைகளை தவிர்த்து திட்டங்களை அறிவித்திருப்பது மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெர்வித்துள்ளனர். 

கட்சியிகளின் நிலைப்பாட்டில் பொதுவாக மாற்று கருத்திருப்பது வாடிக்கையாக இருந்தாலும், தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையில் அலட்சியம் காட்டி வெளியிட்ட நிதிநிலை அறிக்கையை இன்னும் சீர்தூக்கி தயாரித்திருந்தால் நாட்டின் பணவீக்கமும் சரிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். மக்களின் மேம்பாடு ஒரு வேலை உணவு தேவையை பூர்த்தி செய்பவனவாக இல்லாமல் நிரத்தர தீர்வு காணப்பட கூடியதாக இருக்க வேண்டும், அதற்கான அம்சங்களை மத்திய மாநில அரசுகள் தங்களின் நிதிநிலை அறிக்கையில் அரசியல் காரணங்களுக்காக தவிர்த்திருப்பது இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும் வேகத்தை குறைக்குமே தவிர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, வறுமையை  முழுமையாக இந்தியாவில் ஒழிக்க வளர்ச்சி பெற வாய்ப்பே இல்லை.

காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மது ஒழிப்பு அமல்படுத்தப்பட்டிருக்கிறது, அதாவது அரசு மதுவை விற்பதற்கு ஒரு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது அதன் நிமிர்த்தம் அரசு சார தனியார் மது கூடங்கள் உரிய உரிமம் பெற்று அதனை விற்பனை செய்து வருகின்றனர் என பெருமை கொள்ளும் பாரதிய ஜனதா ஆட்சியாளர்கள் ஏன் இந்த நடைமுறையை மற்ற மாநிலங்களில் அமல்படுத்த வேண்டிய தேவை குறித்து அக்கறை காட்டுவதில்லை. போதை பொருட்களின் வரியை உயர்த்தியுள்ள அரசு அதனை மேலும் ஒரு படி சென்று கடுமையாக்கியிருக்கலாம், ஆனால் அதில் சிறிய மெத்தனம் காண்பித்திருப்பது மோடி தனது பிரச்சார கூட்டங்களில் செய்த நம்பிக்கையை வேடிக்கையாக்கி இருக்கிறது.

தினசரி வேலையாகவே நம்பிக்கையின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது ஏற்றத்திற்கான வாழ்வை ஒருபோதும் தராது என்பதற்கு பாஜகவின் மத்திய  பட்ஜெட் முன்மாதிரியாக அமைந்துள்ளது, அதே சமயத்தில், உயர்கல்வி நிறுவனங்களை நிறுவ அக்கறைகாட்டும் அரசு தற்போது உள்ள நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து நிதி ஒதுக்கீடு செய்யாதது வறுத்தம் அளிப்பதாக பல்வேறு ஆய்வாளர்கள், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துகளை வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அமைதிகாக்கும் அரசியல் களம்



காலை எழுந்தது முதல் தொலைப்பேசியில் பதிவிறக்கி வைத்திருக்கும் செய்தி தொடர்பான அனைத்து இயங்கிகளும் ஒவ்வொரு நிமிடமும் நம்மை அரசியல்தொடர் நிகழ்வுகளை சார்ந்தே பயணிக்க வைக்கிறது.

மக்களவையில் நடைபெற்று வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை பொருத்த வரையில் தமிழக அமைச்சர்கள் எழுப்பும் விவாதங்கள் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய விவாதமாக எடுத்துறைக்கப்படுகிறதா அல்லது கட்சியின் மேலிட சுமையின் வற்புறுத்தலால் நடத்தப்படும் நாடகமாஎன்ற அச்சம் நாடாளுமன்றம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போதுதான்  முழுமையாக புரிந்து கொள்ளமுடிந்தது. மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு என்ற போர்வை கட்சி என்ற குழுக்களால் திசை அறியாது செய்துவிடும் எச்ச வேலைகளில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. கனவு அதற்கான தேடலை மாநில அரசுகள் சுய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதும்  எண்ணங்களை விட குறைந்த அளவு அக்கறையை மக்கள் சார்ந்த பொது செயல்பாட்டிற்கு காண்பிப்பதும் எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. டெல்லி அரசியல் வட்டாரங்கள் என்றைக்கும் சிந்தாந்தங்களின் அடிப்படையில் செயல்படுவதில்லை மாறாக கட்சிக்கான பொருளாதார தேவையையும் கட்சியில் தனக்கான அந்தஸ்த்தையும் பரஸ்பர உரவினை கூட்டு சேர்ந்து உருவாக்கி கொள்ளவே முயற்சி செய்வது எதார்த்தம். 

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேச வேண்டிய தேவை இருந்தும் மாநில பிரச்சனைகளை கூற தயங்கும் அரசியல் தலைவர்கள்அப்படிப் பேச துணிந்தாலும் கூட தொடர்ந்து பேசப்பட்ட பிரச்சனையை முன் வைக்கும் அமைச்சர்களாகவே அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றனர். சில மாநில முதல்வர்கள் அவர் சார்ந்த அமைச்சர்களின் வாயிற்கு பூட்டு போட்டிருப்பார்களா என தெரியவில்லை ! உள்ளே பேச வேண்டிய தேவை இருந்தும் விவாத நேரம் முடிந்த பின்பு ஊடகபத்திரிக்கை நண்பர்களுக்கு அவர்களே அழைத்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டினை சொல்லி செல்வர்அதுவும் கூட ஒரு முறை சொன்னதைத்தான் ஒவ்வொரு முறை சொல்லி செல்வதும் வேடிக்கை.

டெல்லியில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கட்சியில் தேசிய தலைவராக அமித் ஷா நியமனம் அக்கட்சியின் டெல்லி மாநில பஜாக தலைவர் சதிஷ் உபத்யாய நியமனம் போன்றவை அதற்கான உதாரணங்களாகும்இதனை கருத்தில் கொண்டு அத்வானி முதல் ராஜ்நாத்சிங் போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட அதற்கான பிரச்சரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கட்சி சார்ந்த முக்கிய நிகழ்வுகள்பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்றவற்றில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அறிவித்துவருகிறது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்ட திக் விஜய் சிங், ச்சி தரூர், பி.சி.சாக்கோ சல்மான் குர்ஷித், மணிஷ் திவாரி போன்றவர்களின் சப்தம் இப்போதெல்லாம் பட்ஜெட் தொடர் கூட்டங்களில் கூட தொலைக்காட்சிகளிலோ அல்லது பிரதான பத்திரிக்கைகளிலோ கேட்காமல் போய்விட்டது. சமூக வலைத்தலங்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரமும்தைரியமும் பிரதான தொலைக்காட்சிகளுக்கும்,பத்திரிக்கைகளுக்கும் இல்லாதது நாட்டின் நடுநிலை எப்படி கையாளப்படுகிறது என்பதை கேள்வி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது,

பாரதிய ஜனதா ஒருபக்கம் கட்சியின் காவி கொள்கையை நவீனப்படுத்த துவங்கியுள்ளது மறுமுனையில் காங்கிரஸ் செயலற்று அமைதிகாக்கிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மட்டும் அவ்வப்போது கூச்சலிட்டு வேடிக்கை காண்பிக்கிறார், ஆனால் மக்கள் இன்னும் தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சியினை அடையாளம் கண்டு சீர்திருத்த முயற்சி செய்யாத முட்டாள்களாகவே மடிவதும், என்னை போன்றவர்கள் தெரிந்ததை கிருக்குவதும் காலத்தின் நடைமுறை.

Wednesday, 11 June 2014

மஞ்சப்பை செதுக்கப்படாத நகரத்து காவியம்

நகரமயமாக்களின் பாதிப்பை நம்ம கிராமத்து தாத்தா எதார்த்தமாக சொல்ல கூடிய படம் மஞ்சப்பை. படத்திற்கு மஞ்சப்பை என்ற பெயர் ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரன் நகரத்திற்கு வரும் போது மஞ்சப்பை என்று எதையும் எடுத்து வரவில்லை.

சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்த விமலை, வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குகிறார் தாத்தா ராஜ்கிரண். பெரியவனாகும் விமல், சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார். அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்ட விமலுக்கு, அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்குள் அமெரிக்கா போகவிருக்கும் அவர், தன்னை வளர்த்து ஆளாக்கிய ராஜ்கிரணை அமெரிக்க செல்லும் வரை தன்னுடன் சென்னையில் வைத்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறார். தாத்தாவையும் வரவழைக்கிறார். கிராமத்து மனிதரான தாத்தா, தன் ஊரில் நடந்து கொள்வதைப் போலவே சென்னை நகரிலும், விமல் குடியிருக்கும் அபார்ட்மெண்டிலும் நடந்து கொள்கிறார், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சரிமாரியாக புகார் செய்ய தாத்தாவின் பார்வை படாமல் சரிகட்டுகிறார் விமல். இறுதியில் விமலின் வேலை, அமெரிக்கா போகும் கனவு, லட்சுமி மேனனுடனான காதலும் கூட தாத்தாவின் எதார்த்த நடவடிக்கையால் சோதனைக்குள்ளாக, கடுப்பான விமல் ஒரு கட்டத்தில் தாத்தாவை திட்டிவிடுகிறார்.

கிராமத்து நிகழ்வுகளை எதார்த்தமாக நகரத்து மக்களுக்கு சிந்தனை படுத்தியது படைப்பின் சிறப்பு. விமல், லட்சுமி மேனன் ஜோடி படத்தின் பல காட்சிகளில் ரசிப்பதற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தாதது ஏமாற்றம். இதில் என்ன பெரிய நகைச்சுவை என்றால் விமல் 1லட்சம் சம்பளம் வாங்குவதாக ஒரு காட்சியில் கூறுகிறார், ஆனால் அலுவலகத்தில் இருக்கும் மற்றொரு காட்சியில் 300 ரூபாய் மதிக்கதக்க ஒரு செருப்புடன் சுற்றி வருவது அவரின் நிலையை சற்று யோசிக்க வைக்கிறது. அமெரிக்க செல்வது தான் தனது இலட்சியம் என படத்தில் எப்படியும் ஒரு பத்து முறை விமல் சொல்லியிருப்பார். சிந்திக்க வைக்க வேண்டிய படத்தை சரியான நெறியாளர்கள் கொண்டு தொகுக்க தவறியதால் கதையின் பல நேரங்களில் தொடர்ச்சியின்றி நாமே அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் காட்சிபடுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம். 

ராஜ்கிரன் மட்டுமே கதையின் மொத்த களமாக இருந்திருக்கிறார் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் கிராமத்து நினைவுகளை அழுத்தமாக சிந்திக்க செய்கிறது மற்றபடி படம் பெரிமிதப்படுத்தும் வகையில் சிறப்பான தொன்றாக தெரியவில்லை. இயக்குனர் என்.ராகவனுக்கு முதலாவது படமாக இருந்தாலும் மஞ்சப்பையின் முடிவை இன்னும் சுவாரஷ்யமான படைப்பாக மாற்றியிருக்கலாம். இருப்பினும் தகுந்த நேரத்தில் இது போன்ற படைப்பை கொண்டு வர முயற்சித்தமைக்கு பாராட்டுக்கள்

நல்லது சொன்னால் கடைசியில கிருக்கனாத்தான் சுத்தனும் என்கிற மாதிரிதான் ராஜ்கிரன், ”சரவணா என் பேரன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் பா” என புலம்புவது தமிழ் சினிமாவில் புதுமையான ஒன்றல்ல என்பது படம் பார்த்த ஒவ்வொருவரும் அறிவார்கள்.

ரகுநந்தனின் இசை படத்தோடு கேட்பதற்கு இனிமையாக இல்லாவிட்டாலும் ஒகே. ஒளிப்பதிவை பொருத்தவரையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம், ரசிகர்கள் பார்த்து பாராட்ட கூடிய ஒளிப்பதிவை பெறாமல் போனது படக்குழுவினருக்கு ஏமாற்றம்.

இலட்சியம் என்பதை தவறாக மீண்டும் மீண்டும் சித்தரித்த படம் மஞ்சப்பையாகத்தான் இருக்க வேண்டும்.

ஸ்டீபன் .வி



Saturday, 31 May 2014

ஊடக தந்திரமும், சுதந்திரமும்

செய்தி விரைவு பெற்றிருப்பதை தேர்தல் நாட்களில் தான் நம்மால் தெளிவாக காண முடிந்தது அப்படிப்பட்ட தேவைக்கதிகமான வேகத்தையும், உழைப்பையும் ஊழியர்கள் காட்ட மக்கள் பல நேரங்களில் சுய சிந்தனையற்று வழிநடத்தப்பட்டார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. நாம் பார்க்கும் பல நிகழ்வுகள் கசப்பாக இருந்தாலும் அவை உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. ஊடக சுதந்திரம் இந்த நாட்களில் ஊழியர்களுக்கான செய்தி தேவையை பூர்த்தி செய்கின்றனவாக இருந்தனவா என்பதை நாம் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஊடகத்துறை, சமூகம் சார்ந்து கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் பெற்றிருந்தும் கூட ஊழியர்கள் இந்த துறையில் எப்படி நடத்தப்படுகிறார்கள், தேர்தல் நாட்களில் எப்படி வழி நடத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் ஊடக சுதந்திரத்தின் வீழ்ச்சி என சொல்லி கொண்டே போகலாம். கொள்கை அடிப்படையில் செயல்படுவதுதான் புத்தியுள்ள மனிதனின் பலம் என மூத்தோர் சொல்வது போல் ஊடக அரசியல்வாதிகள் தங்களது சுய தேவைக்காக ஊழியர்களை அடிமைப்படுத்த தவறியதில்லை. நாம் இங்கு முன் வைக்கும் கருத்துகள் ஊடகங்களில் பணி செய்யும் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் கூட செய்தி இல்லாத நாட்களில் உள் நோக்கம் இல்லாத சிறு சந்திப்பை கூட பெரிதாக்கும் நம் முயற்சி அனுபவம் சார்ந்ததா அறிவு சார்ந்ததா அல்லது நிறுவனத்தின் கட்டளையா என்பதை ஆய்வு மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினால் வரவேற்கதக்கது.

ஜனநாயக திருவிழாவில் ஊடக பண்பாடு எப்படி இருந்தது என்பதையும் மாற்றத்திற்கான தேவையை ஊழியர்கள் எப்படி அணுகினார்கள் என்பதெல்லாம் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் தொகுத்து வழங்கி கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம். பல்வேறு இடங்களில் ஊடக நண்பர்கள் கட்சி அமைப்புகளாலும், சிறு இயக்கங்களினாலும் தாக்கப்பட்டிருப்பது வேதனைக் குரியது. அதே சமயத்தில் ஊழியர்கள் தொடர்ந்து வழிநடத்தப்பட்ட விதம் மற்றும் தேவைக்கேற்ப தயாரித்து கொள்ளாத அணுகுமுறை எல்லாம் மாற்றத்திற்கானவர்கள் சிந்திக்க வேண்டியவை.

மாவட்ட செய்தியாளர்களின் உழைப்பு செய்தி அறையில் எப்படி எதிரொலிக்கப்படுகிறது, குறிப்பாக தேர்தல் நாட்களில் அவர்கள் சந்தித்த வழிமுறைகள்,  பிரச்சனைகள், சுவாரஸ்யமான அனுபவங்கள் ஊடக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எப்படி எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்பதனை பற்றி ஆராய வேண்டிய தருணம். முதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறை கணினிகளை போல் காலத்திற்கேற்ப நம் சிந்தனைகளும், புரிதல்களும், விருப்பங்களும் தொழில் நுற்பம் சார்ந்து விஸ்பரூபம் எடுக்க ஊடக சமூதாயம் இணைய  இதழியல் மற்றும் தொடர்பியலை பயன்படுத்தும் விதமும் மாவட்ட, மாநில செய்தியாளர்கள் அணுகும் முறையும் எப்படி இருக்கிறது? அல்லது வழக்கம் போல் தலைமை கட்டளையிடுவதை எடுத்து கொடுக்கும் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களாக வழிநடத்தப்படுகிறோமா? பதில் சொல்லும் தருணத்தில் இருக்கிறோம் என்பதை அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.

ஊடக நிறுவனத்தின் பெயர் சொல்லி கேள்வி கேட்கும் நிலை தமிழகத்தில் எப்போது மாற போகும் என தெரியவில்லை. தேசிய ஊடகங்கள் எதை செய்கின்றனவோ அதை திருத்தாமல் செய்ய முயற்சிக்கின்றோம். இதழியல் தொடர்பியல் சார்ந்த புரிதலுக்கான தேவையை அறியாத ஊழியர்கள் இங்கு அதிகம் என சந்தேகிக்கவும், விமர்சிக்கவுமே தோன்றுகிறது. தொழில்நுட்பம் போன்ற காரணங்களை விமர்சிக்கவில்லை, எனது கவலை ஏன் ஊடகங்கள் நிறுவனத்தின் வட்டத்தை சுற்றி அலைகின்றன.

ஏன் தொழிலதிபர்கள் மட்டுமே ஊடக நிறுவனர்களாக திகழ்கிறார்கள், சிற்றிதழ்கள் ஏன் வெறுமையையும், கொள்கையும் மட்டுமே பேசி மடிகின்றன என்பதே...

10 நிகழ்வுக்கான அழிவை தேடி தந்து 3 நற் செயல்களில் ஈடுபடுவதால் எத்தனை பேருக்கு நன்மை? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம். பரப்பரப்பாக ஊடக அதிகாரிகளின் கட்டளைக்கினங்க ஓடி செய்தி அனுப்புவதற்கு பெயர் பத்திரிக்கயாளர் இல்லை, மாறாக நிகழ்வை அணுகும் முறையிலான பார்வையில் தான் அதன் திருப்தி உள்ளது தோழர்களை... முடிந்தால் அதற்கான முயற்சிகளை எடுப்போம்.


நன்றி

ஸ்டீபன். வி