I have an idea to create the world the way you want, so be part of this forum...

Wednesday, 27 August 2014

கொடுப்பதற்கும் , இழப்பதற்கும் எதுவும் இல்லை - மறக்க முடியாத சென்னை நினைவுகள்

பெங்களூரில் படித்து கொண்டிருந்த போது அறை நண்பன் ஒருவன் அடிக்கடி மேற்ப்படிப்பு பற்றிய விளக்கங்களை தொலைப்பேசியில் முகம் தெரியாத மாமாவிடம் பேசுவதும், அதற்காக விண்ணப்பங்களை நிரப்புவதிலும் தொடர்ந்து ஆர்வமாக ஈடுபட்டு வந்தான், அவனை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கை குறித்த அச்ச உணர்வு அடிக்கடி வருவதுண்டு. அது ஏன் என்று தெரியவில்லை அவனை விட நானும் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஒரு போட்டி கலந்த வேகமும் என்னிடத்தில் இருந்தது. ஆனால் அவ்வப்போது படித்து என்ன செய்ய போகிறோம், அதற்கு வேலைக்கு சென்றாலும் பணம் நிறைய சம்பாரிக்கலாம் என்ற சிந்தனையும் அவ்வப்போது மனதில் வந்து செல்வதுண்டு.

குடும்பத்தின் தேவை அதிகமாக இருந்ததால் மேற்ப்படிப்பிற்கு செலவு செய்யும் அளவுக்கு குடும்பம் வலிமை பெற்றிருக்கவில்லை. அப்போதெல்லாம் என்னை போன்ற இளைஞர்களுக்கு கால் செண்டரில் பணிபுரிந்தால் அதிகமான சம்பளம் வாங்களாம், மகிழ்ச்சியோடு நம்மாள் வாழ முடியும் என்ற மோகம் மட்டுமே பெங்களூரில் வசித்த என்னை போன்ற இளைஞர்களுக்கு இருந்து வந்தது. அப்படி ஒரு கால கட்டத்தில் தான் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக பயின்று வந்த உறவினர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு ஒரு வித அச்ச உணர்வோடு மேல்ப்படிப்பு சென்னையில் படிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்?

நீ சென்னையில் படிக்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக உதவி செய்வதாக கூறினார். உடனே மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி, பணம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்? அதை எல்லாம் பார்த்து கொள்ளலாம், கவலைப்பட தேவையில்லை என்றார்.அடுத்த மூன்றொரு மாதங்களில் பெங்களூரில் படிப்பும் முடிவடைந்தது. எனக்கு என் உறவினர்(அண்ணன்) இரண்டு கல்லூரிகளின் விண்ணப்ப படிவங்களை வாங்கி அனுப்பி இருந்தார். அந்த கல்லூரிகளில் சேர்வதற்கான விருப்பம் என்னிடம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. மேலும் அந்த கல்லூரிகளில் சேர்வதற்கு சிபாரிசுகள் அவசியம் என்று பல்வேறு சாக்கு போக்குகளை பலகி அனைவரும் சொல்லி வந்தனர்.

என் மனதில் இருப்பதெல்லாம் ஏதாவது படிக்க வேண்டும், திரும்பி பெங்களூர் செல்ல கூடாது என்பது மட்டுமே.

சென்னை வந்த நான், கிண்டியில் இருக்க கூடிய சென்னைப்பல்கலைக்கழக ஆடவர் விடுதியில் தான் தங்கி இருந்தேன். மூன்று நாட்கள் விடுதியில் தங்கியிருந்த எனக்கு, அண்ணன் அவரது ஆராய்ச்சி கூடத்தில் உள்ள ஒரு அறையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். தூங்காத இரவுகள், தாடி கோந்திய முகத்துடன் தொடர் முயற்சிகள், தோல்வி கண்டு பயப்படாத துணிச்சலும் சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை பெற்று தந்தது. பல்கலைக்கழக கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலை, இன்றைக்கு தான் கடைசி தேதி! இன்று நீங்கள் கட்ட இயலவில்லை என்றால் உங்கள் இடத்தை மற்றொருவருக்கு கொடுத்து விடுவோம் என எச்சரித்தார் அலுவலகத்தில் வேலைப்பார்த்த பெண்! அன்றைக்கு என் மூளை வேலை செய்தது போல் இப்போதெல்லாம் வேலை செய்யும் என்றால் ஆச்சரியம் தான். அப்படி ஒரு பதட்டமான நிலை மனதில்! வீட்டிற்கு போன் செய்த தருணம் அது அம்மா எனக்கு கல்லூரியில் சேர சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது, அவ்வளவு பணம் என்னிடம் இல்லை, யார் நமக்கு தருவார்கள்? அவர்களும் புலம்பலுடன் பக்கத்து வீட்டில் கேட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றார்கள், காத்திருந்த நொடிகளை எப்போதும் மறக்க முடியாது! மீண்டும் அலைத்த போது அவர்களிடம் இல்லை என்று வேதனையுடன் சொல்லிவிட்டார்கள். அடுத்த இரண்டொரு மணி நேரத்தில் விஷயம் அறிந்த பெங்களூரை சேர்ந்த நண்பர் ஒருவர் தேவையான பணத்தை தந்து உதவினார்.

ஒரு வழியாக வாழ்க்கையில் இலக்கு, தேடல் அதற்கான முயற்சி, வேகத்தை பெங்களூரை விட சென்னையில் தான் அதிகமாக கற்று கொண்டேன்.

கிண்டி சென்னை பல்கலைக்கழக ஆடவர் விடுதியில் உறவினர் என்ற முறையில் முறைகேடாக யாரும் தங்க கூடாது என உத்தரவினை விடுதி மேலாளர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இரண்டு வாரத்திலே அறிவித்து விட்டார். உடனே அண்ணன் வேறு எதாவது அறைக்கு சென்றால் நன்றாக இருக்கும், என வறுத்தமான மனநிலையோடு கூறியதை என்னால் உணர முடிந்தது. வேலையை செய்து கொண்டே படித்தால் வீட்டை எதிர்பார்த்து இருக்க தேவையில்லை என்ற எண்ணம் எப்போதும் என்னிடத்தில் அதிகம். அந்த வகையில் முதல் பகுதி நேர வேலைக்காக சென்னை சிட்டி செண்டரில் உள்ள கேஎப்.சி உணவகத்திற்கு சென்று வேலை கேட்டேன், உடனே வேலையும் எளிதாக கொடுத்துவிட்டார்கள். மணிக்கு ரூ.31 என தீர்மானிக்கப்பட்டது. உள்ளே சாப்பிட எதுவும் வழங்கப்படாது என்றனர். காலையில் பொதுவாக நான் சாப்பிடுவது கிடையாது, மதியம் பல்கலைக்கழக வகுப்பு தோழி ஒருவர் உணவு எடுத்து வருவார். என் வகுப்பில் என்னை போன்று சாப்பிடாமல் வருபவர்கள் பலர் அதனால் அவள் எடுத்து வரும் அந்த உணவை பகிர்ந்தே உண்டிருக்கிறோம். பகிர்ந்து உண்ணுதலின் அவசியத்தையும் என்னை போன்ற பலரையும் அடையாளம் காட்டியது சென்னை. கற்க வசதியின்றி வறுமையில் வாடிய பலரை ஊக்கப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த குழுக்களை செல்லும் இடமெல்லாம் காண வழிவகை செய்யும் நூலக கழஞ்சியம் சென்னை.
இரண்டாம் வருட முதுகலைப்படிப்பின் போது ஒரு வருட காலம் கால் செண்டர் ஒன்றில் வேலைப்பார்த்து கொண்டே இரவு பகல் தெரியாமல் படிக்க நேரிட்டது. ஒவ்வொரு நாளும் சமூகம் சார்ந்து எதையாவது எழுத வேண்டும், மானுடவியல், ஊடக ஆய்வியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை, துறை தலைவர் அவர்களின் ஆய்வு சார்ந்த சிந்தனை இவை எல்லாம் வேறு உலகிற்கு அவ்வப்போது என்னை அழைத்து செல்வதுண்டு.

படித்து பட்டம் பெற்று பெரிதாக சாதிக்காவிட்டாலும் முயற்சி, வேகம், உழைப்பு அதற்கான தேடலை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கோணத்தில் இன்றும் என்னை உணர செய்யும் உந்து கோளாக சென்னை இருந்து வருவது எதார்த்தம்.













No comments:

Post a Comment