I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday, 20 July 2014

பிரிக்ஸ் மாநாடு மோடிய அரசின் புதிய அத்தியாயம்



பிரிக்ஸ் மாநாட்டில் பேசப்பட்ட மற்ற அம்சங்களை விட, அதன் மூலமாக அமையப் போகும் பிரிக்ஸ் வங்கிதான் பெருமளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது எனலாம். இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின் மோடி பங்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நிகழ்வு இதுவாகும்.

பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரேசில் புறப்படு முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு சண்டை, மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்னைகளால், உலகின் பல்வேறு நாடுகள் அமைதியிழந்து தவிக்கும் நிலையில் நடைபெறுவதால் இந்த மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார். பிரச்சனைகளின் கூடாரமாக உலகம் மாறிவரும் இந்த சூழ்நிலையில் அவற்றுக்குத் தீர்வுகாணும் வலிமையுள்ள அமைப்பாக பிரிக்ஸ் வலுப்பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். குறிப்பாக பிராந்திய எல்லை பிரச்சனைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல், பருவநிலை மாற்றங்களுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்போடு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி தான் விவாதிக்க இருப்பதாகவம் அதில் தெரிவித்திருந்தார். மோடியின் இந்த அறிக்கையும், அவரது அணுகுமுறைகளும் ஏதோ ஒரு வகையில் உலக தலைவர்களின் கவனத்தை ஈர்க்கத்தான் செய்திருக்கிறது.



இந்த பிரிக்ஸ் அமைப்புக்கான திட்டமிடல் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது என்ற உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2001 ஆம் ஆண்டு வரலாற்றின் முக்கிய ஆலோசனையை கோல்ட்மன் என்ற நிறுவனம் தனது ஆய்வில் வளர்ந்த நாடுகளை அடுத்து மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டது, அதில் பிரேசில் (B) ரஷ்யா (R) இந்தியா (I) சீனா (C) நாடுகள் அடங்கும். இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இந்த பிரிக் அமைப்போடு தென் ஆப்பிரிக்காவும் இணைந்து (S) பிரிக்ஸ் என்றானது. இந்த ஜந்து நாடுகளும் மார்ச் 2012 புதுதில்லியில் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் சேர்ந்து சில முக்கிய முயற்சிகளை எடுத்தனர். ஜந்து நாடுகளுக்கு இடையிலான வணிக, பொருளாதார, தொழில் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவது, அதே சமயத்தில் உலகின் பிரதான பிரச்னைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக பிரிக்ஸ் அமைப்பின் நிலைப்பாட்டை உறுதி செய்தல் போன்றவை அந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஜந்து நாடுகளின் முக்கிய மூலதன தேவையாக தீர்மானிக்கப்பட்டு கிடப்பில்போடப்பட்டிருந்த புதிய வளர்ச்சி வங்கி தற்போது மீண்டும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தலைமை பொறுப்பு வகிப்பார் என்பதும் வளர்ச்சி வங்கி ஷாங்காய் மகாணத்தில் நிறுவப்பட உள்ளதும் மேற்குலகத்துக்கு சங்கடத்தைத் தருகின்ற செய்திகள்.

உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் போன்ற பன்னாட்டு முதலீட்டு அமைப்புகள் மேற்கு உலக நாடுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவை வளரும் நாடுகளின் முதலீட்டில் அவ்வப்போது பெரும் இழப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக முக்கிய முடிவுகளில் வாக்குரிமை கூட வளரும் நாடுகளுக்கு தரப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் நிமித்தம் பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் நிறுவப்பட உள்ள புதிய வளர்ச்சி வங்கி ஜந்து நாடுகளின் சம பங்களிப்போடு பெரும் சவாலை உலக நாடுகளுக்கு தற்போது ஏற்படுத்தியுள்ளது.உலகின் உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கும் சீனா, அழுத்தமான பொருளாதார சித்தாந்தங்களைக் கொண்ட இந்தியா, கச்சா எண்ணெய் வளம் கொண்ட ரஷ்யா, விரைவான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் அமைப்பு 40% உலக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இப்படிப்பட்ட இந்த பிரிக்ஸ் அமைப்பு வெறும் செங்கற்களாக மட்டும் இல்லாமல் வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக பொருளாதார கொள்கையை விரைவில் அமைக்க உள்ளதை பிரிக்ஸ் ஆறாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து அதிபர்களும், பிரதிநிதிகளும் அவர்களின் உரையில் முன்வைத்து சென்றனர்.

அதே சமயம் எல்லை தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு காண்பதனால் உருவாகும் நன்மைகள் குறித்து ஒருமித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டது பிரிக்ஸ் அமைப்பு பொருளாதாரத்தையும் தாண்டி நட்பு நாடுகளாக புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் வளார்ச்சி உண்டு. பிரிக்ஸ் அமைப்பின் முதல் தேவையான புதிய வளர்ச்சி வங்கி நம்பிக்கையின் அடையாளம் மட்டும் இன்றி இந்தியாவின் அடுத்த முக்கிய நகர்வுகளுக்கு பயன்படப் போகும் உந்துகோலோக, கேடயமாக இருக்கும் எனவும் நம்பப் படுகிறது.

அதே சமயம் பிரிக்ஸ் அமைப்பின் இதர நாடுகளும் அந்த நாட்டிற்கான தேவையையும், வேகத்தையும் காட்டுவது உறுதி என்ற போதிலும் இந்தியா நிச்சயம் தனித்துவம் பெறும். வர்த்தக உடன் பாட்டினை தாண்டி உறவு மேம்பட வேண்டும் என்பதே பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர்களின் விருப்பமாக இருந்தது. காரணம் சீனாவும் தென் ஆப்பிரிக்காவும் இலங்கையின் நட்பு நாடுகளாகவே கருதப்படுகின்றன. சீனா இலங்கையில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில், இந்தியா பிரிக்ஸ் அமைப்பை தனக்கு தேவையான வகையில் பயன்படுத்தி உறவை சாதகமாக்கி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பிரிக்ஸ் அமைப்பும், அதன் மூலம் ஏற்படுத்தப் போகும் வங்கியும், மேற்குலக நாடுகளுக்கும், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளுக்கும் கடும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்ல, எப்போதுமே அவற்றின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள், சுதந்திரமான பொருளாதாரக் காற்றைச் சுவாசிப்பதற்கான வாய்ப்பையும் இந்த வங்கி அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

No comments:

Post a Comment