I have an idea to create the world the way you want, so be part of this forum...

Monday, 4 November 2013

இலவசத்திற்கு இரையாகும் அப்பாவிகள்

வறுமை, இல்லாமை, இயலாமை இவை மூன்றையும் இலவசம் என்ற அடை மொழியில்  அடிமாட்டு விலைக்கு வாங்கும் சக்தி அரசுக்கு மட்டும் இருப்பதை அடிக்கொரு  முறை அரசு சார்ந்த நிறுவனங்கள் நிருபித்து கொண்டிருக்கிறது. வரி பணம் முதல் வாடகை பணம் வரை ஊழல் நிறைந்த சமூகத்தில் மக்களின் பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட அரசின் இலவச மருத்துவமனைகளில் போதிய செவிலியர் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் மட்டும் இன்றி நோயுற்றவர்களை பார்த்து கொள்ளும் உறவினர்களும் சேர்ந்து அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது தான் நாம் கண் கூடாக கண்ட உண்மை.

அலட்சிய பதில்களுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட அரசியல் செல்வாக்குகளுக்கும் எப்போதும் துணை நிற்கும் நிறுவனமாக அரசு சார்ந்த துறைகள் இயங்கி வருகின்றன, அதுவே அரசு வேலைக்கான மோகத்தையும் இன்றைய இளைஞர்களுக்கு அதிகப்படுத்துகின்றன என்றே கூறலாம்.

பொதுவாக அரசு மருத்துவமனையை நாடும் பெரும்பாலனோர் படிப்பறிவற்றவர்களாகவும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் இருப்பதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சாதாரன காய்ச்சல் மாத்திரையே மொத்த நோய்க்கு தீர்வு என எண்ணி மகிழும் அப்பாவிகள் என்பது  அரசு சார்ந்த அதிகாரிகளுக்கு தெரியுமா என்ற ஜயத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன.

அரசு மருத்துவமனையில் ஏற்படும் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறைவினால் ஏற்படும் பணி அரசியல் நமக்கு வெறுப்பை மட்டுமே தருவனவாக இருக்கின்றன. பியூன் முதல் வளாகம் பெருக்குவோர் வரை அவரவர்க்கு ஆட்சி செய்யும் அரசியல் கூடாரமாக அரசு மருத்துவமனைகள் பரினமிக்கின்றன. சுத்தம், சுகாதாரம் இன்றி தவிக்கும் நோயாளிகள் படும் அவதியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே கூற வேண்டும் .

இரண்டு மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட போர்வை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கட்டப்படும் கட்டுகள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போடப்படும் ஊசி, பிச்சை போடுவது போல் அதட்டி கொடுக்கப்படும் இலவச ரொட்டிகள் என அதன் பட்டியலை நீட்டி கொண்டே போகலாம்.

பாவம்! மருத்துவ படிப்பின் போது பகுதி நேர பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்கள் தான் அங்கு ஊசி போடுவது முதல் அத்தனை வேலையும் முழுநேரம் பார்த்து கொள்கின்றனர், அவர்களும் இல்லையேல் அது ஆதரவற்ற அனாதை மடமாக மாறிவிடும் என்பது உண்மை.

அரசு மருத்துவமனையில் நிகழும் மற்றொரு அவலம் , சிபாரிசு பேய், எத்தனையோ அப்பாவி உயிர்களை கொல்லும் சக்தி படைத்தது,

அரசியல் சிபாரிசு, உறவு சிபாரிசு, பணியிட சிபாரிசு என ஓடி அலையும் இந்த கொடிய பேய் யார் என்று தெரியாமலே எத்தனையோ உறவுகள் மருத்துவமனை வளாகத்தின் அருகே ரூ.10க்கு விற்கப்படும் சுகாதாரமற்ற உணவு பொட்டலங்களை உண்டு மருத்துவ மனையிலேயே மூன்று மாதம், நான்கு மாதம் என தஞ்சம் கொள்ளும் அவல நிலையும் ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

மருத்துவமனையில் சேர்ந்த போது தலைவலி மட்டும் தான் கனமாக இருந்தது ஜயா, ஆனால் இரண்டு மாதத்திற்கு பிறகான மருத்துவ பரிசோதனையில் வயிற்று போக்கு, உடல் வலி, மன வலி என என்னால் எழுந்தே நடக்க முடியவில்லை என வெம்பி அழுதார் ஒரு வயதானவர். பச்சை நிற போர்வை, பச்சை நிற அடையாள போர்டுகள் என தமிழக முதல்வரின் படம் “அம்மா” என்ற அடை மொழி திட்டத்துடன் எங்கு திரும்பினாலும், பாவம் அந்த பாமர மக்கள் எதை கொடுத்து உயிர் வாங்குவது என தெரியாமலே புலம்பி அழும் அவல நிலை அவர்களின் தொடர் கதையாகி போனது.

என் தந்தை உடல் நல குறைவினால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்போது அவருக்கு தேவையான மருந்துகளை பெறுவதிலும், மருத்துவர்களை அழைத்து அவரின் மருத்துவ குறிப்பு மற்றும் உடல் நிலை பற்றி கேட்டறிய படித்த என்னால் கூட முடியவில்லை அவ்வளவு அலட்சிய பதில்கள் அங்கு பணி செய்வோரிடமிருந்து, நினைத்து பாருங்கள் படிப்பறிவு இல்லாத அந்த ஏழை மக்களால் எப்படி மருத்துவ குறிப்புகளை கேட்டறிய முடியும்.

நண்பர்களே எனது இந்த பதிவு எந்த ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலோ அல்லது அரசை குற்றம் சுமத்துவதற்கான முயற்சியோ அல்ல. ஒரு சாதாரன எழுத, படிக்க தெரிந்த பாமரனின் அனுபவ ரீதியிலான குமுறல்.

No comments:

Post a Comment