I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday 20 September 2015

ஏழைகளுக்கு இலவசம் கூட அறியாமையின் தேடல் தான்

பல நேரங்களில் மனிதர்கள் இருள் சூழ்ந்த கருமை நிற பிண்பங்களோடு வாழ்ந்து விடுகிறோம். அறியாமை தகர்தெரியும் அனுபவங்கள் நாளடைவில் புத்தியை கூர்மைபடுத்திவிடுகின்றன. அதன் நிமித்தம் பிறப்பால் , மொழியால், சமூகத்தால், அமைப்பினால் ஒப்பீடு செய்து , எந்த வகையில் தான் உயர்ந்தவன், திறமையானவன் என்பதை சமூகத்திற்கு தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் கலந்த ஒப்பனைகளால் மறைமுகமாக வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறோம். 

சமூகப்பிரச்சனைகளை பேசும் நாம் ஒரு போதும் அந்த சமூகத்தின் கடை நிலை சாமனியனின் உணர்வுகளை பற்றி பேச விரும்புவதில்லை . ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் சாரம்சங்களையும், தற்பெருமைகளை மட்டுமே தாங்கி நிற்கிறோம். 

போலியான தேவைகளை தாங்கிய உணர்வுகள் மட்டுமே நமது உள்ளத்தில் நிதம்பி நிற்கின்றன. காரணம் தேடல் என்பது மற்றொருவரின் சுவாசத்தையும், சுகத்தையும் திருடும் தொழிலாக மாறிவிட்டது.

சமூகம் எந்த அளவுக்கு கேவலமான உணர்வுகளை கொண்டுள்ளது. அந்த உணர்வுகள் எந்த அளவுக்கு பிறரை தாழ்வுபடுத்த கூடியது ,தாழ்வு உணர்வுகள் எப்படியெல்லாம் ஏழை சாமனியன் அனுபவங்களை தாழிட்டு பங்கு போட்டு சூரையாடி கொண்டிருக்கின்றன என்பதுதான் இந்த  கட்டுரையின் நோக்கம்.

ஏன் இதையெல்லாம் நான் எழுதி வருகிறேன் எழுதி நாட்கள் ஆகிவிட்டன என்பதற்காக இல்லை. வாழ்வியல் தத்துவங்கள் அனுபவ ரீதியாக பெறப்படும் பொக்கிஷங்கள் என்பதை நாம் மறுத்துவிட  முடியாது. இந்த பொக்கிஷ அனுபவம் எப்படி எல்லாம் ஒரு மனிதனை சிறுமை படுத்த வல்லது, பலரை செழிப்போடும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தக்க பக்குவத்தை தருகிறது என்பதற்கான சில அனுபவங்களை கடந்த சில நாட்களில் பெற முடிந்தது. அதை எல்லாம் இந்த கட்டுரையின் வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் அவ்வளவுதான்.

நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு இடமும் மர்மங்களை தாண்டி எதார்தங்ளை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் கண்டு கொண்டாலும் கடந்து செல்வது நமது புத்தி கூர்மையின் இயல்பு. இறப்பிற்கு பின் மனித ஆத்மாக்களை சூரையாடும் நரகத்தை விட நிஜ வாழ்க்கையின் விழியாக இருக்கும் சமூகம்  கொடியது. நிச்சயம் தேவைகள் என்னவென தெரியாமல் பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழும் பல சாமனியர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். 

எத்தனையோ முறை கடந்து சென்றுள்ளேன், ஆனால் கவனித்ததில்லை, காரணம் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதையே எனது மிகப்பெரிய சவால். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போலத்தான். நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை வரை செல்ல நேர்ந்தது. மெட்ரோவில் சென்ற நான் எய்ம்ஸ் நிறுத்தத்தில் இறங்கி சுரங்க வாயிலாக மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். நான் எடுத்து வைத்த ஒவ்வொரு படியும் எனக்குள் பல்வேறு நெருடலான சிந்தனைகளை ஏற்படுத்தி கொண்டே இருந்தது.



மூன்றாவது படியை கடந்த போது, வறுமை ததும்பிய முகங்களோடு தாய் பாலுக்காக ஏங்கிய தன் குழந்தையை அரவணைத்து, குழந்தையின் பசியை போக்கி கொண்டே, தனது அருகில் இருந்த காய்ந்து போன ரொட்டியை வேறு வழி இல்லாமல் திண்று அசை போட்டு கொண்டிருந்தால், அவள் அருகில் ஈக்கள் சூழ கணவன் கைகளில் மிகப்பெரிய காய கட்டுகளோடு தன்னையே மறந்து உறங்கி கொண்டிருந்தார். இப்படியாக நான் ஒரு குடும்பத்தை மட்டும் பார்க்கவில்லை, மருத்துவமனை செல்லும் வழியில் பலரை என்னால் பார்க்க முடிந்தது. அனுமதி சீட்டு வாங்க உள்ளே நுழைந்த போது ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலும் மிகப்பெரிய கவுண்டர்கள் அமைத்து அதன் விவரம் எழுதப்பட்டிருந்தாலும் பலமுறை இந்த மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். படிக்காத ஏழை பாமரர்களுக்கு நிச்சயமாக புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. நான் உள்ளே சென்ற போது ஒரு சமூத்திரம் போன்று, கணக்கிலிட முடியா நோயாளிகள், அதில் எப்படியும் நூறு பேர் ஆவது என்னிடம் எந்த கவுண்டருக்கு செல்ல வேண்டும் என கேட்டிருப்பார்கள், நானும் முதல் முறை சென்றதால் கேட்ட அனைவரிடத்திலும் தெரியவில்லை என கூறி வந்தேன்.



எத்தனை வசதிகளும், இலவச சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், அதை எப்படி பெறுவது என்ற சிறு விழிப்புணர்வோடு இல்லாமல், மருத்துவமனையை பார்த்தாலே போதும் நோய் குணம் ஆகிவிடும் என எண்ணும் பல குடும்பங்களை என்னால் அன்று பார்க்க முடிந்தது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை சரியாக கட்டப்படவில்லை, அதன் சேவை சரியில்லை என்பது எனது கருத்தல்ல. இத்தனை பெரும் கட்டிடத்தில் எப்படி தனது நோய்க்கான தீர்வை பெறுவது என்பது தெரியாமல் மாத கணக்கில், வார கணக்கில் கையில் இருப்பதை எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களிடத்தில் கொடுத்துவிட்டு, நினைத்து பார்க்கவே முடியாத சூழலில் தினமும் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கும் அவர்களை என்ன சொல்வது!??



நான் எதையும் புதிதாக சொல்லிவிடவில்லை. நாட்டின் கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை, வசதி என்பது ஒரு சிலருக்குதான் , அதை அனைவராலும் பங்கு போட்டு கொள்ள முடியுமா என்றால் நிச்சயம் இல்லை?

இல்லாமையை ஒவ்வொரு தருணங்களிலும் அரசும், வசதி படைத்தவர்களும் ஏழைகளுக்கு உணர்த்தி கொண்டே வருகின்றனர். ஏழைகளுக்கு வழங்கப்படும் சிறிய சன்மான இணாம் முதல் மேம்பாட்டு நல திட்டங்கள் வரை அனைத்தும் புத்தி கூர்மை கொண்ட அறிவாளிகள் மட்டுமே பெறுவதற்கு வசதியாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

சமூக நீதி என்ற பெயரில் அறிவிக்கப்படும் மத்திய, மாநில அரசின் நல திட்டங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமைபடுத்தப்பட வில்லை என்பதே உண்மை.

ஸ்டீபன் வி

No comments:

Post a Comment