I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday 3 April 2016

விடுதி நினைவுகள்

அரசு விடுதி;  நண்பர் ஒருவருடன் காலையில் தொலைப்பேசியில் பேசி கொண்டிருந்த போது கடந்து போன நினைவுகளை , ஒட்டு மொத்தமாக அசை போட வைத்துவிட்டார்.




எங்கள் சிறிய அறையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இரண்டுதான், ஆனால் மீதமுள்ள சிறிய இடத்தை நிரப்புவதற்கு எப்போதும் நண்பர்கள் கூட்டம் குறைந்ததில்லை. அறை எண் 505 இதழியல் படிக்கும் மாணவர்கள், அவர்களின் நண்பர்கள் என பலரின் சப்தங்களோடு பகலிலும், இரவிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பல்கலைக்கழக விடுதியில் இடம் கிடைத்த போது அறை எண் 505 இல்,  நானும் மற்றொரு நண்பர் என இரண்டு பேர் மட்டுமே  இதழியல் துறையை சார்ந்தவர்கள், மீதமுள்ள நண்பர்கள் வரலாறு, எம்.காம் போன்ற முதுகலை பட்ட படிப்புகளை படிப்பவர்களாக இருந்தார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இரவாக பல இரவுகள் இருந்திருக்கும், காரணம் தூக்கம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வராது. சீட் விளையாடுவதில் தொடங்கி, அரசியலை பற்றி பேசி மொத்த உலக நிகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்த்தது போலான சொல்லாடல்களுடன் லைட்டை ஆஃப் செய்யாமலேயே தூங்கிவிடுவார்கள்.

(இதிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும், தேவைக்கான பணத்தை நாமே சம்பாதித்து கொள்வதற்காக பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டிருந்த காலம். அப்போது இருந்து எனக்கான வேகத்தில் 10 % கூட இப்போது இல்லை என்பது தான் உண்மை)

கதைக்கு வருவோம் !!!

பகுதி நேர வேலையை முடித்துவிட்டு இரவு 12 அல்லது 1 மணிக்கு அறைக்கு வருவது வழக்கம். எஞ்சியிருக்கும் 5 மணி நேரத்தை சரியாக பயன்படுத்தி தூங்கினால் தான் மறுநாள் வகுப்புக்கு சரியான நேரத்திற்கு தெளிவாக செல்ல முடியும்.

 வகுப்புக்கு 9.30மணிக்கெல்லாம் செல்லவில்லை என்றால் ஆய்வு மாணவர் ஆரோக்கியசாமி தாமதமாக வருபவர்களின் பெயரை பேராசிரியரிடம் தெரிவித்துவிடுவார்.

( எத்தனையோ திறமையான ஊடகவியலாளர்களை பார்த்திருப்பினும் எனது பேராசிரியர் ரவீந்திரன் எனக்கு இப்போதும்  வியக்கதக்கராகவே தெரிகிறார். எந்த அளவிற்கு தமிழில் ஆளுமையோ அதே ஆளுமை ஆங்கிலத்திலும் சிறிய ஒரு நிகழ்வை கூட ஆய்வு சார்ந்து அதற்கான ஆயிர விளக்கங்களை புரிகிற மொழியில் எளிமையாக பேசும் திறன் கொண்டவர்.

பேராசிரியரிடம் தாமதமாக வந்து கெட்ட பேர் வாங்கிவிட கூடாது என்பதற்காக ஒயிட் போடு, கீரின் போடு, ரெட் போடு எல்லாம் எப்போதும் பார்ப்பதில்லை. நடந்தே வந்துவிடுவோம் ( நண்பர்கள் ஒரு சிலர்).)

அறை எண் 505 க்கு வருவோம். எங்கள் அறையில் எப்போதும் கூட்ட நெருக்கடி தான், முன்பே சொன்னது போல ஒரு சில நாட்களில் 5 பேர் , பல நாட்களில் 10 நண்பர்கள் வரை தூங்குவது வழக்கம். காமராஜர் சாலையில் வைக்கப்படும் பதாகைகள் தான் எங்களது மெத்தைகளாக பல நாட்களில் இருந்திருக்கும்.

நான் அறைக்கு 12 அல்லது 1 மணிக்கு வரும் போது ஒருவன் உலரி கொண்டிருப்பான், மற்றொருவன் அறை அலரும் அளவிற்கு கொரட்டை விட்டு தூங்கி கொண்டிருப்பான், இப்படியாக மீதமுள்ள அனைவரும் இவை இரண்டில் ஒன்றை செய்து கொண்டிருப்பார்கள். விடுதியில் எனக்கும் வழங்கும் உணவை எனது  தட்டில் அறை நண்பர்கள் யாராவது எடுத்து வைத்திருப்பார்கள்.


(((எனக்காக இந்த சேவையை செய்ய அவர்கள் ஒருநாள் கூட வருந்தியதில்லை ..)))

(((எப்போதும் பெரிதாக நண்பர்கள் என்று சொல்ல கூடிய வகையில் ஒரு சிலரை தவிர பெரிய அளவிலான கூட்டம் இருந்ததில்லை, அப்படி இருக்க, ஒரு போதும் நான் விரும்பியதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னை பெரிதாக மதிக்க கூடிய நண்பர்கள் இருப்பதுண்டு.)))

தனியார் விடுதிகளில் தங்கி படித்தவர்களின் அனுபவங்களை கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் அரசு விடுதிகளிலும், அரசு சார்ந்து இயங்கும் கல்வி நிலையங்களிலும்  சுவைக்கப்படும் அனுபவங்கள் காலத்திற்கும் பல தனியார் கல்வி குழுமங்களில் கிடைப்பதில்லை.

பல துறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சம்பந்தமே இல்லாமல் கலந்து கொண்டு உணவு அருந்துவது, ரூ.9க்கு காலையில் பொங்கள், ரூ.14 க்கு மதியம் சாம்பர் ரைஸ், சின்ன சின்ன துறை சார்ந்த போராட்டங்களை வளாகத்தில் நடத்துவது என அத்தனை சிலிர்ப்பூட்டும் நினைவுகளை இன்றைக்கு அசை போட வைத்து விட்டது சென்னை பல்கலைக்கழக திருவள்ளுவர் ஆடவர் விடுதி.

அவசரமாக சைக்கிலில் பல்கலைக்கழக சென்று பின் பகுதி நேர வேலைக்கு செல்வதும், வேலை செய்ய கூடிய இடத்திற்கு பல்கலைக்கழக பெண்கள் வந்தால் ஒடி ஒழிவதுமான அந்த வாழ்க்கையை நினைத்து பார்க்கும் போது இன்றும் அவ்வளவு மகிழ்ச்சி...







Sunday 20 September 2015

ஏழைகளுக்கு இலவசம் கூட அறியாமையின் தேடல் தான்

பல நேரங்களில் மனிதர்கள் இருள் சூழ்ந்த கருமை நிற பிண்பங்களோடு வாழ்ந்து விடுகிறோம். அறியாமை தகர்தெரியும் அனுபவங்கள் நாளடைவில் புத்தியை கூர்மைபடுத்திவிடுகின்றன. அதன் நிமித்தம் பிறப்பால் , மொழியால், சமூகத்தால், அமைப்பினால் ஒப்பீடு செய்து , எந்த வகையில் தான் உயர்ந்தவன், திறமையானவன் என்பதை சமூகத்திற்கு தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் கலந்த ஒப்பனைகளால் மறைமுகமாக வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறோம். 

சமூகப்பிரச்சனைகளை பேசும் நாம் ஒரு போதும் அந்த சமூகத்தின் கடை நிலை சாமனியனின் உணர்வுகளை பற்றி பேச விரும்புவதில்லை . ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் சாரம்சங்களையும், தற்பெருமைகளை மட்டுமே தாங்கி நிற்கிறோம். 

போலியான தேவைகளை தாங்கிய உணர்வுகள் மட்டுமே நமது உள்ளத்தில் நிதம்பி நிற்கின்றன. காரணம் தேடல் என்பது மற்றொருவரின் சுவாசத்தையும், சுகத்தையும் திருடும் தொழிலாக மாறிவிட்டது.

சமூகம் எந்த அளவுக்கு கேவலமான உணர்வுகளை கொண்டுள்ளது. அந்த உணர்வுகள் எந்த அளவுக்கு பிறரை தாழ்வுபடுத்த கூடியது ,தாழ்வு உணர்வுகள் எப்படியெல்லாம் ஏழை சாமனியன் அனுபவங்களை தாழிட்டு பங்கு போட்டு சூரையாடி கொண்டிருக்கின்றன என்பதுதான் இந்த  கட்டுரையின் நோக்கம்.

ஏன் இதையெல்லாம் நான் எழுதி வருகிறேன் எழுதி நாட்கள் ஆகிவிட்டன என்பதற்காக இல்லை. வாழ்வியல் தத்துவங்கள் அனுபவ ரீதியாக பெறப்படும் பொக்கிஷங்கள் என்பதை நாம் மறுத்துவிட  முடியாது. இந்த பொக்கிஷ அனுபவம் எப்படி எல்லாம் ஒரு மனிதனை சிறுமை படுத்த வல்லது, பலரை செழிப்போடும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தக்க பக்குவத்தை தருகிறது என்பதற்கான சில அனுபவங்களை கடந்த சில நாட்களில் பெற முடிந்தது. அதை எல்லாம் இந்த கட்டுரையின் வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் அவ்வளவுதான்.

நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு இடமும் மர்மங்களை தாண்டி எதார்தங்ளை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் கண்டு கொண்டாலும் கடந்து செல்வது நமது புத்தி கூர்மையின் இயல்பு. இறப்பிற்கு பின் மனித ஆத்மாக்களை சூரையாடும் நரகத்தை விட நிஜ வாழ்க்கையின் விழியாக இருக்கும் சமூகம்  கொடியது. நிச்சயம் தேவைகள் என்னவென தெரியாமல் பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழும் பல சாமனியர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். 

எத்தனையோ முறை கடந்து சென்றுள்ளேன், ஆனால் கவனித்ததில்லை, காரணம் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதையே எனது மிகப்பெரிய சவால். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போலத்தான். நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை வரை செல்ல நேர்ந்தது. மெட்ரோவில் சென்ற நான் எய்ம்ஸ் நிறுத்தத்தில் இறங்கி சுரங்க வாயிலாக மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். நான் எடுத்து வைத்த ஒவ்வொரு படியும் எனக்குள் பல்வேறு நெருடலான சிந்தனைகளை ஏற்படுத்தி கொண்டே இருந்தது.



மூன்றாவது படியை கடந்த போது, வறுமை ததும்பிய முகங்களோடு தாய் பாலுக்காக ஏங்கிய தன் குழந்தையை அரவணைத்து, குழந்தையின் பசியை போக்கி கொண்டே, தனது அருகில் இருந்த காய்ந்து போன ரொட்டியை வேறு வழி இல்லாமல் திண்று அசை போட்டு கொண்டிருந்தால், அவள் அருகில் ஈக்கள் சூழ கணவன் கைகளில் மிகப்பெரிய காய கட்டுகளோடு தன்னையே மறந்து உறங்கி கொண்டிருந்தார். இப்படியாக நான் ஒரு குடும்பத்தை மட்டும் பார்க்கவில்லை, மருத்துவமனை செல்லும் வழியில் பலரை என்னால் பார்க்க முடிந்தது. அனுமதி சீட்டு வாங்க உள்ளே நுழைந்த போது ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலும் மிகப்பெரிய கவுண்டர்கள் அமைத்து அதன் விவரம் எழுதப்பட்டிருந்தாலும் பலமுறை இந்த மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். படிக்காத ஏழை பாமரர்களுக்கு நிச்சயமாக புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. நான் உள்ளே சென்ற போது ஒரு சமூத்திரம் போன்று, கணக்கிலிட முடியா நோயாளிகள், அதில் எப்படியும் நூறு பேர் ஆவது என்னிடம் எந்த கவுண்டருக்கு செல்ல வேண்டும் என கேட்டிருப்பார்கள், நானும் முதல் முறை சென்றதால் கேட்ட அனைவரிடத்திலும் தெரியவில்லை என கூறி வந்தேன்.



எத்தனை வசதிகளும், இலவச சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், அதை எப்படி பெறுவது என்ற சிறு விழிப்புணர்வோடு இல்லாமல், மருத்துவமனையை பார்த்தாலே போதும் நோய் குணம் ஆகிவிடும் என எண்ணும் பல குடும்பங்களை என்னால் அன்று பார்க்க முடிந்தது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை சரியாக கட்டப்படவில்லை, அதன் சேவை சரியில்லை என்பது எனது கருத்தல்ல. இத்தனை பெரும் கட்டிடத்தில் எப்படி தனது நோய்க்கான தீர்வை பெறுவது என்பது தெரியாமல் மாத கணக்கில், வார கணக்கில் கையில் இருப்பதை எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களிடத்தில் கொடுத்துவிட்டு, நினைத்து பார்க்கவே முடியாத சூழலில் தினமும் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கும் அவர்களை என்ன சொல்வது!??



நான் எதையும் புதிதாக சொல்லிவிடவில்லை. நாட்டின் கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை, வசதி என்பது ஒரு சிலருக்குதான் , அதை அனைவராலும் பங்கு போட்டு கொள்ள முடியுமா என்றால் நிச்சயம் இல்லை?

இல்லாமையை ஒவ்வொரு தருணங்களிலும் அரசும், வசதி படைத்தவர்களும் ஏழைகளுக்கு உணர்த்தி கொண்டே வருகின்றனர். ஏழைகளுக்கு வழங்கப்படும் சிறிய சன்மான இணாம் முதல் மேம்பாட்டு நல திட்டங்கள் வரை அனைத்தும் புத்தி கூர்மை கொண்ட அறிவாளிகள் மட்டுமே பெறுவதற்கு வசதியாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

சமூக நீதி என்ற பெயரில் அறிவிக்கப்படும் மத்திய, மாநில அரசின் நல திட்டங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமைபடுத்தப்பட வில்லை என்பதே உண்மை.

ஸ்டீபன் வி

Sunday 15 February 2015

டெல்லி தேர்தல் - வெற்றி பெற்றதா ஜனநாயகம் ?

டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜனாமா  செய்தது ஏன்? தனி பெரும்பாண்மை கிடைக்கும் பட்சத்தில் நினைப்பதே எழுதில் கொண்டு வர முடியும் என்பதாலா?

70 தொகுதிகளை கொண்ட சட்ட மன்ற தேர்தலிலே எழுச்சி கலந்த இளைஞர் படை என தேவைக்கேற்ப ஆதரவு, ஆகவே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டால் மொத்த இளைஞர் படையின் பேராதரவை பெற்று விடலாம் என்ற பேராசையினாலா?

ஆசை இருந்தது ஆதரவாக இருந்த கூட்டம் அடிப்படையாக தங்களை பெரிய போட்டிக்கு தயார் படுத்தி கொள்ளவில்லை, இதனை அடுத்து மேற் கொண்ட அடிப்படை ரீதியிலான தயாரிப்பின் பிரதிபலன் டெல்லியில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் 2015 சட்ட மன்ற தேர்தல் வெற்றி.

ஆம், பாராளுமன்ற தேர்தல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பார்ப்போமே என்ற தைரியம் தான் ஆம் ஆத்மியின் இந்த வெற்றி.

கட்சி ரீதியான சுய பரிசோதனையை எளிதில் ஒரு சில கூட்டத்தை வைத்து எந்த அளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ அத்தனையும் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் செய்திருக்கிறது.

ராஜனாமா செய்த உடன் பாராளுமன்ற தேர்தல் முயற்சி, நான்கு பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி, டெல்லியில் ஆட்சி நடைபெறாமல் சட்ட ஒழுங்கு நடைபெறுவதாக தர்ணா போராட்டம், டெல்லி சட்ட சபையை உடனே கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என தன்னை சாதாரனாமான மனிதனாகவே பிரதிபலித்து கொண்ட கெஜ்ரிவால், தன்னை ஒரு போதும் அரசியல் வாதி என பேசியதில்லை.

இந்த சாதாரன மனிதனால் எப்படி ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது?, அவர் இனைந்து செயல்பட்ட ஊழல் இயக்கத்தில் இருந்த கிரண் பேடி, அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்த போது அதிர்ப்தி தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணா ஹசாரேவிற்காக சேர்ந்த கூட்டம் கெஜ்ரிவால் பக்கம் திரும்பியதற்கான காரணம் என்ன?

கெஜ்ரிவால் என்ற சாமனியனை அரசியல் தலைவர் முதல் அரியணை ஏற வைத்த அதே ஊடகங்கள் தான் அடுத்த 49 நாட்களுக்குள் ஆட்சி செய்வதற்கான தகுதியை கெஜ்ரிவால் பெற்றிருக்கவில்லை என்பதனை அவருக்கு உணர்த்தியிருந்தன. கெஜ்ரிவாலை விமர்சிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதற்கேற்ற ஆயிரம் விளக்கங்கள் அவர் கூறினாலும் உண்மை என்னவோ ஆட்சி செய்யும் அளவிற்கு அவரியம் இருந்த தைரியம் இந்திய அரசியல் சமநிலையை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே அவ்வப்போதும் அவர் நடந்தவிதம் உணர்த்தியது.

புரிந்து கொண்ட கெஜ்ரிவால் அரசியலை சாமனிய வேடத்துடன் ஆழமாக அணுக ஆரம்பித்தார், சிறு குழுக்குள் உருவாக்கி மக்களின் பிரச்சனையை அவர்களில் ஒருவனாக அணுக வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டார்.

தோல்வி என்ற வார்த்தையை கேட்டாலே சோர்வுறும் சமூதாயத்தில் தொடர் வெற்றிகளை தன் பேச்சாற்றளினால் எழுதில் பெற்ற மோடியின் முதல் தோல்வி முகத்தை கெஜ்ரிவாலின் எழுச்சி என கூறுவது எப்படி ஒப்பாகும் ?

கெஜ்ரிவாலின் வெற்றி ஜனநாயகத்தின் எழுச்சி என நினைத்தால் நம்மை போன்ற முட்டாள்கள் நிச்சயமாக இருக்க முடியாது. வெற்றி பெற்றவன் ஒரு போதும் அதற்கான உழைப்பை யோசிக்க மாட்டான் என்பதே புரியாதவர்கள் சொல்லும் எதார்த்த வார்த்தைகளாகவே என்னால் பார்க்க முடிகிறது.

மோடியின் இந்த 7 மாத மத்திய ஆட்சியில் பல தோல்விகளை அடைந்து விட்டார், ஜனநாயக ரீதியான முதல் தோல்வி என டெல்லி தேர்தல் விமர்சிக்கப்பட்டாலும் மக்கள் ஒரு போதும் மோடியின் எழுச்சியையோ அல்லது மோடியினால் மட்டுமே இதை செய்ய முடியும் என்றோ வாக்களிக்கவும் இல்லை அல்லது மோடி போன்ற பேடிக்கு வாக்களிப்போவதில்லை. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற அனைத்து மாநிலங்களுமே காங்கிரஸ் கட்சியினால் பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வளர்ச்சியை எண்ணி காத்திருந்த மக்களின் ஏக்கமே மோடியின் வாக்காக மாறியது. படித்த இளைஞர்களை மட்டுமே மோடி என்ற போலி அலை ஊடகங்களால் கவர்ந்திழுக்க  காரணமாயிருந்தன தவிர மக்கள் அனைவரும் மோடி அலைக்கு தலை அசைத்துவிட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.

வளர்ச்சியை எண்ணி காத்திருக்கும் ஏழைகளின் மனதில் பாரதிய ஜனதா தனது கட்சியின் தனி கொள்கையை புகுத்த கூடிய வகையில் செயல்படுத்துவதே மோடியின் அவ்வப்போதைய தோல்வி முகத்திற்கான அடையாளங்கள்.

விவசாயத்தை எண்ணி காத்திருக்கும் சாமனியர்களுக்கு அவர்களின் தேவையை பெரிய நிறுவனங்களை கொண்டு ஒரு சில நகரங்களை நவீன மாக்கும் செயல் மோடிக்கு பின் வரும் கேடிகளுக்கு பல கோடிகளை சம்பாதித்து தரும் நடைமுறையாக இருந்து விட கூடாது என்பதே அனைவரின் எண்ணம் .

கெஜ்ரிவாலை வெற்றியின் நாயகனாக நாம் சித்தரித்தாலும், ஜனநாயக எழுச்சியின் முகம் என விமர்சனம் செய்தாலும் , அடிப்படையில் இவர்கள் அடையாளம் தேட முயற்சித்தவர்கள் அதற்கான அடையாளத்தை தற்போது வெற்றிகரமாக பெற்றுள்ளார்கள். இதை தவிர எழுச்சியாளன் என கெஜ்ரிவாலை விமர்சிக்கும் அளவிற்கு கெஜ்ரிவால் நடந்து கொண்டார என்றால் இல்லை.

கடந்த ஒராண்டு காலமாக எப்படியாவது விட்டு வந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்போடு வீடு வீடாக டெல்லி சாமனியனின் கையை பிடித்து கேட்ட மன்னிப்பின் கைமாறுதான் இந்த  67 தொகுதியின் வெற்றி.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கெஜ்ரிவால் காட்டும் முனைப்பும் அதற்கான உழைப்பும் மத்திய அரசின் பார்வையில் கேலி கூத்தாக போவது உறுதி. பின் நிச்சயம் வாக்குறுதிகள் அனைத்தும் குற்றச்சாட்டுகளாக தெருக்களில் சப்தங்களாக மாறும் என்பது எதிர்பார்த்ததே காரணம் கெஜ்ரிவால் எடுத்து கொண்ட ஜனநாயக அடையாளம் ”சப்தம்”. 

கை மன்னிப்புக்கு கிடைத்த மரியாதை கெஜ்ரிவாலின் சப்தத்திற்கு கிடைத்தால் மட்டுமே ஜனநாயகத்தின் மாற்று சக்தியாக ஆம் ஆத்மி கட்சியை கருத முடியும்.

மோடிக்கும் , கெஜ்ரிவாலுக்கும் இடையே பெரிய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியாது, காரணம் இரண்டு பேரும் ஊடக விரும்பிகள். அந்த ஊடகங்கள் தான் அவர்களை தலைவர் அந்தஸ்த்திற்கு உயர்த்தியது. இவர்கள் சார்ந்த கட்சிகளிலோ அல்லது இயக்கங்களிலோ தலைவர்கள் ஆக ஒருபோது அடையாளம் கொள்ளப்படாதவர்கள் என்பதே மேற் சொன்ன பல கருத்துகளுக்கு உதாரணம்















Thursday 2 October 2014

தீர்வை நோக்கிய தீர்ப்பு: சாத்தியமா ஜாமின்?

ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவரது வருமானத்துக்கு மீறி, சுமார் 66.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு ஒரு வழியாக முடிவு பெற்று ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் இழந்து தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.

1991ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய்  (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருடைய சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்திருந்தது. 
ஜெயலலிதா மீதான முதல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதி  1996 செப்டம்பர் 18. இதன் பின்பு இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை. 1997-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதியன்றுதான் தாக்கல் செய்துள்ளனர். இதில் 9 மாதங்கள் கழிந்துவிட்டன.

சொத்து குவிப்பு வழக்கை 1.7.1991க்கு முன் இருந்த சொத்துகள் 1.7.1991 முதல் 30.4.1996 வரையிலான சேர்த்த சொத்துக்கள் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. வழக்கு காலத்திற்கு முன் ரூ.2 கோடியே 01 லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததாகவும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு ரூ.64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்மந்தமான உறவினர்கள். மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தத்து பிள்ளையாக ஏற்றுகொண்டு பிரமாண்ட திருமணம் செய்து வைத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் உள்ளது.

முதல் வழக்கில் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யவே மேலும் 4 மாதங்கள் முடிந்து 1997 அக்டோபர் 21 அன்றுதான் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நீதிமன்றத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது இந்த வழக்கு.

1997க்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2000 செப்டம்பர் 2-ல் இரண்டாவதாக ஒரு புது வழக்கு ஜெயலலிதா மீதும் இதர குற்றவாளிகள் மீதும் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் 6 மாதங்கள் கழித்து 2001 மார்ச் 23 அன்றுதான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது.

2001 செப்டம்பர் 21-ல் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்பு 1 வருடம் கழித்தே சாட்சிகள் விசாரணை தொடங்கின. 76 சாட்சிகளும் 2003 பிப்ரவரி மாதம் வரையிலும் பல்வேறு நாட்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது பல்டி அடித்தனர். வழக்கு விசாரணை சென்றதைப் பார்த்து, ஜெயலலிதா தப்பித்துவிடுவார் என்பது போல் தோன்றிய நேரத்தில்தான் பேராசிரியர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்து வழக்கினை பெங்களூருக்கு மாற்றும்படியான உத்தரவை பெற்றுக் கொடுத்தார்.

பேராசிரியர் அன்பழகன், உரிய நேரத்தில் தலையிட்டு வழக்குத் தொடர்ந்திருக்காவிட்டால் நிச்சயம் ஜெயலலிதா இந்த வழக்கில் ஜெயித்திருப்பார்.

பெங்களூருக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலேயே ரிவ்யூ பெட்டிஷன் என்று சொல்லி காலத்தை கடத்தியது ஜெயலலிதாதான். இதனால் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து 2005 மார்ச் 28-ம் தேதியில்தான் பெங்களூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளும், வாக்குமூலங்களும் மொழி பெயர்க்கப்பட்டு குற்றவாளிகள் தரப்பிற்குத் தரப்பட்டன.
இடையில் எனக்குத் தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது. எனவே தமிழில் எனக்குக் குற்றப்பத்திரிகையை மொழி மாற்றம் செய்து கொடுங்கள்என்று சசிகலா கொடுத்த மனுவோடு, மறுவாரம் சுதாகரனும், இளவரசியும் சேர்ந்து மனுவைக் கொடுத்து இன்னும் கொஞ்சம் லேட்டாக்கினார்கள்.

2005 ஜூலை மாதத்தில் இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து நடத்த முடிவு செய்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பேராசிரியர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் இந்த வழக்கை நீண்ட வருடங்கள் இழுக்க வைத்தது. 

அன்பழகன் தொடர்ந்த வழக்கினால் 2005 ஆகஸ்ட் 5-ல் இந்த வழக்கிற்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், நான்கு ஆண்டுகள் கழித்து, 2009 டிசம்பர் 7-ம் தேதி மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு வழக்கினை முடித்து வைத்தது.
இதன் பின்பு 2010 ஜனவரி மாதம் தொடங்கி மாதந்தோறும் இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று, ஏதேனும் ஒரு முன்னேற்றங்கள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன.

2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருக்கும் வாசகங்கள் தவறான அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்பதை 6 ஆண்டு காலம் கழித்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கூறினர்.

எந்தெந்த இடங்களில் குற்றம், குறைகள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றைப் பட்டியலிட்டு கேட்டால், கோர்ட்டிலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மாறாக, இனிமேல் புதிதாக, நீதிமன்றமே நேரடி கண்காணிப்பில் மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார்கள் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள். சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தபிறகு, இப்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா விற்கு, இவ்வழக்கின் இறுதியில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும், இந்த வழக்கில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து இருப்பதால்தான், இப்படி மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாரா?
தன் மீது தவறில்லை என்றால், தன் மடியில் கனமில்லையென்றால், நீதிமன்றத்தில் துணிந்து நின்று வாதாடி வெற்றி பெற்று தனது நேர்மையைக் காட்டுவதைவிட்டுவிட்டு, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், ஜனநாயகத்தையும், மக்களையும் ஏமாற்றுவது சரியா?

நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா வரும்போது, அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது.  அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது. இதுவெல்லாம் தேவையானதுதானா?

அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா: எனக்கு மட்டும் ஒரு 10 வயது குறைவாக இருந்திருந்தால் நானா அவங்களான்னு பார்த்திருப்பேன். இப்போது கையறுநிலையில் இருக்கிறேன். என் மீது நீதிபதிகள், கவர்னர் போன்றவர்களிடம் மனுக் கொடுப்பது, நீதிமன்றத்திலேயே பிட் நோட்டீஸ் கொடுப்பது, செய்தி ஊடகங்களில் அவதூறு பரப்புவது என அதிமுக அனுதாபிகளும், ஜெயாவுக்கு நெருக்கமானவர்களும் தொடர்ச்சியாக மெண்டல் டார்ச்சர் கொடுத்தார்கள். கடைசியில் அவர்கள் விரும்பியது போலவே நானும் விலக நேரிட்டது. இதனை கர்நாடக உள்துறை செயலருக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்திலும் தெரிவித்துள்ளேன்.என்கிறார் அந்த 78 வயது ஆச்சார்யா.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க இதுவரை 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் பச்சாப்புரே, மனோலி, ஆன்ட்ரிக்ஸ், மல்லிகார்ஜுனய்யா, சோமராஜு, பாலகிருஷ்ணா, முடிகவுடர், ஜான் மைக்கேல் குன்ஹா

காலவிவரம்

1996 ஜூன் 14

சுப்ரமணிய சுவாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறியிருந்தார். அதையேற்று கொண்ட நீதிமன்றம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது

1996 ஜூன் 26

புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் உயர் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.சி.பெருமாளுக்கு உத்தரவிட்டார்.

1996 செப்டம்பர் 18

முதல் தகவல் அறிக்கை வழக்கு குற்ற எண் : 13 ஏ.சி./96/ ஹெட் குவார்ட்டர்ஸ் Charge w/s 13(1) (e) r/w 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள், இந்தியாவிற்குள் உள்ளவை.

1997

ஜெயலலிதா மற்றும் சசிகலா வீடுகளில் சோதனை நடத்தியபோதுதங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள், பட்டுச் சேலைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் என்று 1066 அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர்.

1997 ஜூன் 4

விசாரணை அறிக்கை கொடுத்தபின், இவ்வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சென்னை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

1997 ஜூன் 5

வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

1997 அக்டோபர் 21

2,3 மற்றும் 4-ம் குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 39 சாட்சிகளை தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

1999 நவம்பர் 6 முதல் 11

லண்டனில் சசிகலா உறவினரான தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், பல்வேறு ஆவணங்களை தமிழக போலீசார் கைப்பற்றினர்

2000 செப்டம்பர் 2

இரண்டாவது வழக்கு குற்ற எண்: 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/2 13(2) of the P.C. Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள், லண்டனில் உள்ளவை.

2001 மார்ச் 23

2-வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2001 ஏப்ரல் 17

குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (முதல் குற்றவாளி) ஜெயலலிதாவை தலைமையைகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது.

2001 மே 21

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

2001 செப்டம்பர் 21

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

2002 மார்ச் 2

முதல் குற்றவாளி ஜெயலலிதா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2002 நவம்பர் முதல் பிப்ரவரி 2003
76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்கெனவே கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து பல்டி அடித்தனர்.

2003 பிப்ரவரி 21

அரசுத் தரப்புச் சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

2003 பிப்ரவரி 24

குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.சி.பி.சி படி கேள்விகள் கேட்கப்பட்டன.

2003 பிப்ரவரி 28

இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யகோரி தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்தை தொடர்ந்து, சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

2003 நவம்பர் 18

இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண் 208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

2004 செப்டம்பர் 10

வழக்கை சென்னை தனி நீதிமன்றம், பெங்களுருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்தது.

2005 பிப்ரவரி   

கர்நாடக அரசின் சார்பில் சிறப்பு நீதிமன்றம், தனி நீதிபதி பச்சாப்புரே, தனி அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

2005 மார்ச் 28

சாட்சிகளின் வாக்குமூலங்களும், வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகள் மற்றும் தமிழக அரசிற்கு வழங்கப்பட்டது.

2005 ஜூன் 27

முதல் குற்றவாளி ஜெயலலிதா 2002 பிப்ரவரி 11-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.

2005 ஜூலை

2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 - என்ற மனு, அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்டது.

2005 ஆகஸ்ட் 5

உச்சநீதிமன்றம், அன்பழகனின் வழக்கை ஏற்றுக் கொண்டு பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.

2009 டிசம்பர் 7

உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் : 938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்தது.

2010 ஜனவரி 30

சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளைத் திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண்: 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண்: 322/2010 தாக்கல் செய்யப்பட்டது.

2010 பிப்ரவரி 25

சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண்: 321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண்: 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

2010 மார்ச் 3

அரசுத் தரப்புச் சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள் தரப்பில் மனு எண்: 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.

2010 மார்ச் 4

2010 மார்ச் 3-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி மனு எண்: 346-ல் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 மனுக்களின் மீது விவாதம் நடைபெற்றது.

2010 மார்ச் 5

மனு எண்: 340, 341, 346 இம்மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்.

2010 மார்ச் 8

1997 ஜூன் 5-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண்: 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.

2010 மார்ச் 10

79/2010 மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2010 மார்ச் 19

மனு எண் 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 மனுவொன்றை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர்.

2010 மார்ச் 22

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 2010 மே 3-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

2010 ஏப்ரல் 18

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண் 359-ஐ தாக்கல் செய்தனர்.

2010 ஏப்ரல் 27

இந்த மனுவை (மனு எண்:359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2010 மே 7

2010 மே 7-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 2010 மே 11-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2010 மே 11

விசாரணை நீதிமன்றத்தில் மனு எண்: 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறைச் சட்டம் 482-ன்படி தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது. இதனால் குற்றவாளிகள் இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

2010 மே

70000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

2010 ஜூலை 21

3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.

2010 ஜூலை 22

மனு எண்: 396. விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் இந்த மனு நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்த போதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது

2010 ஜூலை 29

மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளியான ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு எண்: 3748/2010

2010 ஜூலை 30
மனு எண்: 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்ப வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதன் வழக்கு எண்: 3766/2010.

2010 ஆகஸ்ட் 4

இந்த வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கியே காலம் கடத்துவதாகக் கூறி தி.மு.க.வின் இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2010 ஆகஸ்ட் 16

மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எண்: 3766/2010 மீதான விசாரணை நடந்தது. தொடர்ந்து அடுத்த விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2010 ஆகஸ்ட் 19

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு எண்: 3766/2010 மீதான விசாரணை தொடர்ந்து நடந்தது.

2011

முதல் ஏழு மாதங்களுக்குள்ளாகவே, சாட்சியங்களிடம் நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு 23 மனுக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

2012 ஆகஸ்ட் 14

வழக்கில் ஆஜராகி வாதாடிவந்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தமது பதவியை ராஜினாமா செய்தார். மன உளைச்சல் காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டார்.

2012 ஆகஸ்ட் 31

சொ‌த்து‌க்கு‌வி‌ப்பு வழ‌க்கை ‌விசா‌ரி‌த்து வ‌ந்த பெ‌‌ங்களூரு ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி ம‌ல்‌லிகா‌ர்‌ஜுனையா ஓய்ழவு பெ‌ற்றா‌ர். பு‌திய ‌நீ‌திப‌தியாக சோமரா‌ஜ் ‌நிய‌லமி‌க்க‌ப்ப‌ட்டார்.

2013 பிப்ரவரி 2

கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியால், சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் பவானி சிங்.

2013 ஆகஸ்ட் 27

வழக்கில், அரசு வக்கீல் பாவனி சிங் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று திமுக புகார் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவரை அதிரடியாக நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது.

2013 செப்டம்பர் 19

தமிழக முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர், பவானி சிங் மீண்டும் நீக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், ஜெயலலிதா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

2013 செப்டம்பர் 22

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க, பெங்களூரு சிறப்பு கோர்ட் புதிய நீதிபதியாக, முடிகவுடர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏழாவது நீதிபதி இவர். நீதிபதிகள் பச்சாப்புரே, மனோலி, ஆன்ட்ரிக்ஸ், மல்லிகார்ஜுனய்யா, சோமராஜு மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே விசாரித்தனர்

2013 செப்டம்பர் 30

சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை பதவி நீக்கம் செய்த கர்நாடக அரசின் ஆணை செல்லாது' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2013 நவம்பர் 7

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா பதவியேற்றார்.

2014 மார்ச் 14

உடல்நிலையை காரணம் காட்டி, வழக்கில் ஆஜராகி வாதம் செய்யாத அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கு ஒருநாள் சம்பளம் ரூ.65 ஆயிரத்தை அபராதமாக விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா உத்தரவிட்டார்.

2014 மார்ச் 22

7 மாத இழுபறிக்கு பின், அரசு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்தை தொடங்கினார்.சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்கள்,
சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பு வக்கீல் அமித் தேசாய் 8 நாட்கள் இறுதி வாதம்.
தொடர்ந்து பவானி சிங் 15 நாட்கள் இறுதி வாதம்.

2014 ஆக.28

சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவிப்பு. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக உத்தரவு.

2014 செப். 16

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் தேதி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அறிவிப்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு.

2014 செப்.27 

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு.

தீர்ப்பின் முழு விவரம்
முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது என்றும் மேலும் இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்படும். வழக்கு விசாரணைக்கான செலவுத் தொகையாக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி வழங்க வேண்டும்என நீதிபதி தீர்ப்பில் அறிவித்தார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் பி.குமார், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், அபராதத் தொகையும் மிகவும் அதிகம் என்றும், அதனை குறைக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 1991-96 காலகட்டத்தில் குற்றவாளிகள் 4 பேரும் குவித்த சொத்துக்களின் மதிப்போடு ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான். ஆகவே, அதனை கண்டிப்பாக செலுத்த வேண்டும்என்று உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகள் 4 பேரையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்குமாறு பெங்களூர் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கருத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ”ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி குன்ஹா, நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. அபாராதம் விதித்ததில் குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார்.
ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் வேண்டுமானால் இந்த தீர்ப்பை ஏற்கலாம். ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாகவும் மேலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆழமாக பரிசீலிக்க வேண்டி தேவை உள்ளதுஎன கூறியதை அடுத்து ஜெயலலிதா தரப்பில் ராம்ஜெத்மலானி வாதாடினால் தீர்ப்பினை மாற்ற முடியும் என நம்பி அவரை இந்த வழக்கில் வாதாட ஜெயலலிதா தரப்பில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டு இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஜாமின் கோரி  வாதங்களை தொடர முயற்சித்தனர்.. ஆனால் கர்நாடாக உயர் நீதிமன்றமோ விடுமுறை கால அமர்வினால் இது போன்ற வழக்குகளை உடனே விசாரித்து ஜாமின் வழங்க முடியாது. ஆகவே திங்கள் கிழமை வரை காத்திருக்கும் படியும் மேலும் இது போன்ற வழக்குகளை முழுவதுமாக புரிந்து கொள்ள நேரம் தேவைப்படுவதாக கூறி வழக்கினை திங்கள் கிழமைக்கு தற்போது ஒத்தி வைத்துள்ளது.

யார் இந்த ராம்ஜெத்மலானி?

இளம் வயதில் சட்டம்  படித்து அனைத்து துறைகளிலும் குறிப்பாக குற்ற பிண்ணனி உள்ள வழக்குகளை எளிதாக தன் சட்ட அனுபவங்களையும் அறிவையும் வைத்து வாதாடும் திறமை படைத்த ராம்ஜெத்மலானி யாருக்காக தனது சட்ட அனுபவத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்ற விவரங்களை நாம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஊழலுக்கு எதிராக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ராம்ஜெத்மலானி பின்பு அரசியலில் ஆசைக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் கைகூலியாக தனது சட்ட கூறுகளை விற்க ஆரம்பித்தார் அதன் விளைவு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவி பெற்றார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியாளர்களை சட்ட பூர்வமாக பல்வேறு வழக்குகளில் சிக்க செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார், இதுவே அவரின் வழக்காடும் திறமையை மக்கள் மத்தியில் கவனத்தை பெறுவதற்கான மாபெரும் சக்தியாக பயன்படுத்தி கொண்டார். அதன் பிறகு அத்வானி, அமித் ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சி சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் வாதாடி அந்த வழக்குகளில் வெற்றியும் பெற்று தந்தார். அதன் கைம்மாறா க மாநிலங்களவையில் அமைச்சர் பதவியை பெறுவதர்கான வாய்ப்பினை பாரதிய ஜனதா கட்சி வழங்கியது. முதல் முறையாக மும்பையில் போட்டி இட்டு மத்திய அமைச்சர் பதவியையும் (சட்ட அமைச்சராகவும்) அதன் பின்னர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்தும் பாரதிய ஜனதா கட்சி ராம்ஜெத்மலானியை கவுரவப்படுத்தியது.

நீதின் கத்கரியை விமர்சித்த்தற்காக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சுமார் 6 வருடம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பொது நல வழக்குகளை தொடர்பவர்களின் மிக பெரிய எதிரியாக எப்போதும்  செயல்பட கூடியவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவ்வப்போது அவரின் வாத திறமையை கண்டு வியந்து தங்களது தீர்ப்பை மாற்றி எழுதும் அளவுக்கு திறமை கொண்டவர் என்பது உண்மை அதே சமயத்தில் அவரின் வாதமும், வழக்கின் தீர்ப்பை திசை திருப்பும் தன்மையும் இந்திய அரசியல் சட்டம் எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கும் என்பதை அவரின் வாதத்தை பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்ட னையை நிறுத்துவதற்குக் கார ணமாக இருந்தார்.
அப்சல் குரு தூக்கு தண்டனை ரத்து, மும்பையை கலக்கிய நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் வழக்கு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கு ஆகியற்றில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதேபோல போலி என்கவுன்ட்டர் வழக்கில் இப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும், சுரங்க ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூராப்பவுக்கும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கும் ஜாமீன் வாங்கிக் கொடுத்துள்ளார். எனவே ஜெயலலிதாவுக்கும் இந்த வழக்கில் ஜாமீன் வாங்கித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீதிபதி ஜான் மைக்கில் டி குன்ஹா மீது அதிமுகவினர் எழுப்பும் கேள்விகள்:
•    சுமார் 11 ஆண்டுகலுக்கு முன்னர் அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் செல்வி உமாபாரதி அவர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் வந்து ஆர் எஸ் எஸ் கொடியை ஏற்றி வைத்தார் உடனே கர்நாடக கத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர் மீது எப்ஐஆர் போட்டது இதை ரத்து செய்ய பெல்காம் நீதிமன்றத்தில் கர்நாடகா பிஜேபி யினால் வழக்கு தொடரப்பட்டது ஆனால் அதை ரத்து செய்ய மறுத்து உமாபாரதி முதல்வர் பதவி இழந்து சிறை செல்ல காரணமாக இருந்த்து இதே குண்ஷா தான் அப்போதே இவருடைய இந்து எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெரிதும் விவாதிக்கப்பட்டது.

•    ஜெயலலிதா மீது அரசாங்க வக்கீல் கூறிய 18 வகையான சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்துடன் புள்ளி விவரத்தோடு முதல்வரின் வக்கீல் குமார் counter செய்த பிறகும் இதை பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தீர்ப்பு கொடுத்தது சட்டம் படித்த அனைவருக்கும் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.
•    தீர்ப்பின் முழு தண்டனை முடிவை மாலை ஆறு மணி வரை வழங்காமல் இழுத்தடித்து பெங்களூர் உயர்நீதிமன்றத்துக்கு ஜாமீன் கேட்டு செல்லமுடியாமல் செய்த காரணம் என்ன?

•    முன் கூட்டியே பரப்பன அக்ராகார நீதி மன்றத்தில் பெண்கள் சிறையினை தயார் நிலையில் வைத்த காரணம் என்ன??

•    950 கோடி ஊழல் செய்த லல்லுக்கு 25 லட்சம் அபராதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை ஆனால் 66 கோடிக்கும் உன்டான கணக்கை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தாக்கல் செய்தும் அதைப்பற்றி எல்லாம் பரீசிலனை செய்யாமல் 130 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத்தண்டனை யும் கொடுத்த்து ஏன்??

•    குற்றம்சாட்ட பட்டவர்களின் வாதங்கள் தொடங்குவதற்கு முன்னரே விலைபேச பட்ட மற்றவர்களாள் எழுதி கொடுக்கபட்ட தீர்ப்பா?

•    சுமார் 8 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் மற்றும் 3 பேர்களை " குற்றவாளிகள் " என்று குண்ஹா கூறியது ஏன் ?

•    கர்நாடக த்திற்கு எதிராக காவிரி நடுவன் மன்ற ஆனையை தமிழகதிற்கு பெற்றதுக்கு முதலமைச்சர் க்கு கர்நாடக காங்கிரஸ் சால் கொடுக்க பட்ட பரிசா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்டோபர் 6ஆம் தேதி ஜாமின் வழங்கப்படுமா? வழக்கறிஞர்கள் கருத்து:

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் வரும் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது., அன்றைய தினம் விசாரணை நடைபெறும் ஆனால் ஜாமின் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஜெயலலிதாவின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதனை நீதிமன்றம் ஏற்காது. ஏனெனில் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயே மருத்துவ வசதிகள் இருக்கிறது ஆகவே சிறைத்துறை மருத்துவமனை அவரின் உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளும். அதனால் உடம்பு சரியில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறமுடியாது.

அரசியல்வாதிகள், ஊழல் செய்து குற்றவாளியாக மாட்டிக் கொண்டால், அவர்களுக்கு நீதிமன்றம் எளிதில் அவர்களுக்கு ஜாமின் வழங்குவது இல்லை. நீதிபதிகள் இது போன்ற வழக்குகளில் மிகவும் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருப்பதினால் ஜாமின் கிடைக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.

எந்த குற்றவாளிகளை கைது செய்தாலும் அவர்கள் உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவ பின்னணியில் ஜாமின் கேட்டு முயற்சிப்பர் இது போன்ற சட்ட நாடகங்கள் நீதிமன்றங்களில் ஏற்று கொள்ளப்படாது என நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவ காரணங்களை பிரதாணப்படுத்தி ஜாமீன் கோர முடியாது.

இந்த ஜாமின் மனு ஆறாம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், உடனே ஜாமின் கிடைக்குமா என்றால் அதன் பதில் இல்லை காரணம் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் ஜாமின் மனு பல பக்கங்கள் கொண்டிருக்கிறது. மேலும் தீர்ப்பும் ஆயிரம் பக்கங்களை கொண்டிருக்கிறது, அதனால், அரசு வழக்கறிஞரா பவானி சிங் இருந்தாலும், புதியவரா ஒருத்தர் வந்தாலும் அதையெல்லாம் படிக்க ஒரு வாரமாவது அவசாகம் கேட்பார்கள் அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துதான் ஆக வேண்டும். ஆகவே, ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைப்பது தள்ளிப் போவதர்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டால் ஆபத்து ஜெயலலிதாவுக்குத்தான் என்பது உறுதி. காரணம் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் கருத்து ஒரு மித்த கருத்தாகவும் குற்றச்சாட்டாகவும் இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தனித்து இந்த வழக்கை வேறு படுத்த முடியாது அதே சமயம் இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் குற்றம் செய்ததற்கான சாட்சியங்கள் அதிகமாக இருப்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும்  தண்டனையின் அளவு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனை அளவை விட அதிகமாகத்தான் இருக்கும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்து கூற மறுக்கும் அரசியல் தலைவர்கள்:

இந்திய அரசியல் தலைவர்களை பொருத்தவரையில் பாரபட்சம் இன்றி  இந்த வழக்கின் தீர்ப்பை குறித்து தங்களது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வர் இது போன்ற தண்டனையை எதிர் கொள்வது இதுவே முதல் முறை என்பது அனைவரையும் விட அரசியல் கட்சி தலைவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகர்சூனா கார்கே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூட இது குறித்து எந்த வித கருத்தையும் தன்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே போன்று கலைஞர் முதல் தேசிய தலைவர்கள் அத்தனை பேரும் வழக்கின் தீர்ப்பு கருத்து கூற விரும்பவில்லை. அப்படி கருத்து சொல்ல கூடியவர்களும் ஒரு வித அனுதாபம் சார்ந்த கருத்தை முன் வைக்கின்றனர் குறிப்பாக ஜெயல்லிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தகைய தீர்ப்பை மேல் முறையிடுவதற்கு சட்டங்கள் உள்ளன ஆகவே அதிமுகவினர்  போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாமல் சட்ட பூர்வமாக இதனை அனுக வேண்டும் என்று தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.

அதிமுகவினர் பிரச்சனையை மக்கள் பிரச்சனையாக முன் வைத்து அனுதாபமும் தேடக் கூடிய சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிலவி வருவதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.

குற்றம் செய்தவருக்கு தண்டனை, நீதி என்பது அனைவருக்கும் சமம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும், இத்தகைய போராட்டங்கள், கலவரங்கள் மக்களின் பொது புத்தியை மழுங்கடிக்க செய்வதற்கான ஒரு போக்காக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.